வடமாகாண சபையூடாக எதிர்காலங்களில் முன்பள்ளிக்கல்வி தொடர்பில் கவனம் செலுத்தப்படும் - அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா

எதிர்காலங்களில் வடமாகாண சபையூடாக முன்பள்ளிக் கல்விச் செயற்பாடுகள் மேம்படுத்துவது தொடர்பில் உரிய கவனம் செலுத்தப்படும் என பாரம்பரிய கைத்தொழில்கள் மற்றும் சிறுதொழில் முயற்சி அபிவிருத்தி அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் தெரிவித்துள்ளார்.

யாழ் மத்திய கல்லூரி மைதானத்தில் இன்றையதினம் (16) இடம்பெற்ற மாவட்டத்தின் இவவ்வாண்டுக்கான மழலைகள் விளையாட்டு விழாவில் பிரதம விருந்தினராகக் கலந்து கொண்டு உரையாற்றும்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில், இளமையில் கல்வி சிலையில் எழுத்து என்பதற்கிணங்க எமது எதிர்கால சமூக மேம்பாட்டிற்காக முன்பள்ளிகள் சிறப்பான பங்களிப்புகளை வழங்க வேண்டும் என்பதுடன் அதற்கு துறைசார்ந்த ஆசிரிய சமூக ஒன்றிணைந்த ஒத்துழைப்பும், ஒத்தாசையும் வழங்க வேண்டும்.

இம்மாவட்டத்திலுள்ள சில முன்பள்ளிகளில் பல்வேறு வசதி வாய்ப்புக்கள் இல்லாது காணப்படுகின்ற போதிலும் அவற்றுக்கு தீர்வு காண்பதில் வடமாகாண ஆளுநருடன் இணைந்து முன்பள்ளிக் கல்வித்திட்டத்தை நடைமுறைப்படுத்தி மேம்படுத்தி வருகின்றோம்.

அத்துடன் எதிர்காலங்களில் வடமாகாணசபை முன்பள்ளிக் கல்விச் செயற்பாட்டை மென்மேலும் மேம்படுத்தும் பொருட்டு முன்பள்ளி ஆசிரியர்களுக்கான பயிற்சிகள், நிரந்தர நியமனம், வேதனம் உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் தொடர்பில் கவனம் செலுத்தப்படும் என உறுதிமொழி வழங்கினார்.

இந்நிகழ்வில் அமைச்சர் அவர்கள் முன்பள்ளி சிறார்களுக்கு சிற்றுண்டிகளை வழங்கியதுடன் பரிசில்களையும் வழங்கி வைத்தார்.