வசதியுமில்லை மொழி தெரிந்த வைத்தியருமில்லை! மல்லாவி வைத்தியசாலையில் நோயாளர்கள் அவதி

மல்லாவி ஆதாரவைத்திய சாலையில் தமிழ் வைத்தியர் இல்லாததால் நோயாளர்கள் பல்வேறு சிரமங்களை எதிர் கொண்டுள்ளனர்.அத்துடன் ஆபத்தான நோய்களுக்கு இங்கு சிகிச்சையளிக்கக்கூடிய வசதியின்மையால் தூர இடங்களுக்கு நோயாளர்கள் செல்லவேண்டிய நிலையும் ஏற்பட்டுள்ளது.
 
சிங்கள மொழி பேசும் வைத்தியரே இங்கு சேவையில் உள்ளார்.இதனால் தமது நோய்களைச் சரியாகச் சொல்லி உரிய சிகிக்சையைப் பெறுவதில் சிரமம் ஏற்பட்டுள்ளதாக பாதிக்கப்பட்ட அந்தப் பிரதேச மக்கள் தெரிவிக்கின்றனர்.
 
குறிப்பாக இப்போது வன்னிப்பகுதியில் நிலவிவரும் கடும் வறட்சி காரணமாக தடிமல்,காய்ச்சல்,சளி,தோல்நோய்கள் போன்றவற்றால் மக்கள் அவதிப்படுகின்றனர்.
 
அவதிப்படும் நோயுடன் சிகிச்சைக்காக வரும் நோயாளர்கள் வேறு மருத்துவமனைகளுக்கே மாற்றப்படுக்கின்றனர்.
 
அண்மையில் வவுனிக்குளம், 4ஆம் கட்டை, அம்பாள்புரத்தை சேர்ந்த 7 வயதான தர்சிகா என்ற சிறுமி விஷ கடிக்கு இலக்காகி மல்லாவி ஆதார வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டு அஙகிருந்து வவுனியாவுக்கு மாற்றப்பட்டு அங்கு சிறுமி சிகிச்சை பயனின்றி கடந்த மாதம் உயிரிழந்துள்ளார். விஷகடிக்கு இந்த வைத்திய சாலையில் சிகிச்சை அளிக்கக்கூடிய போதிய வசதியின்மையாலையே இந்த நிலைமை ஏற்பட்டுள்ளது.
 
பாண்டியன்குளம் பிரதேசத்தில் 15 கிராம சேவகர் பிரிவுகளையும்,துணுக்காய் பிரதேசத்தில் 20 கிராம சேவகர் பிரிவுகளையும் கொண்டு 8 ஆயிரம் குடும்பங்களுக்கு மேல் வசிக்கும் இந்த பெரும் பிரதேசத்துக்கு முக்கியமான வைத்தியசாலையாக மல்லாவி ஆதார வைத்திய சாலையே காணப்படுகின்றது.
 
எனவே தமது நிலையை கருத்தில் கொண்டு குறித்த வைத்தியசாலையை விரிவுபடுத்துவதுடன் தமிழ் வைத்தியர் ஒருவரையும் நியமித்துத் தருமாறும் அந்த பகுதி மக்கள் கேட்டுள்ளனர்.