ரெஸ்ட் தரவரிசையில் சங்கக்கார தொடர்ந்தும் முதலிடம்: சச்சின் பின்னடைவு

சர்வதேச ரெஸ்ட் கிரிக்கெட் தரவரிசையில் இலங்கையின் குமார் சங்கக்கார, தென்னாப்பிரிக்காவின் ஹசிம் ஆம்லா, மேற்கிந்தியத் தீவுகளின் சிவநாராயண் சந்தர்பால் ஆகியோர் துடுப்பாட்ட வீரர்கள் பட்டியலில் முறையே முதல் மூன்று இடங்களில் உள்ளனர்.

இந்திய பந்து வீச்சாளர் அஸ்வின் 19 இடங்கள் முன்னேறி 25-வது இடத்தைப் பிடித்துள்ளார். அதே நேரத்தில் "டாப்-10´ துடுப்பாட்ட வீரர்கள் பட்டியலில் இருந்த சச்சின் கீழே வந்துள்ளார்.

நியூஸிலாந்துக்கு எதிரான முதல் ரெஸ்ட் ஆட்டத்தில் 85 ஓட்டங்கள் கொடுத்து 12 விக்கெட்டுகள் வீழ்த்தியதன் மூலம் ரெஸ்ட் பந்து வீச்சாளர்கள் தரவரிசையில் அஸ்வின் 25-வது இடத்துக்கு முன்னேறியுள்ளார். இதற்கு முன்பு தரவரிசையில் அவர் இந்த உச்சத்தை எட்டியது இல்லை.

அதே நேரத்தில் ரெஸ்ட் பேட்ஸ்மேன்கள் தரவரிசையிலும் அஸ்வின் 3 இடங்கள் முன்னேறி 78-வது இடத்துக்கு வந்துள்ளார். நியூஸிலாந்துக்கு எதிராக டெஸ்டில் அவர் 37 ஓட்டங்கள் எடுத்தார் என்பது நினைவுகூரத்தக்கது.

இந்த ரெஸ்டில் சிறப்பாக பந்து வீசி 6 விக்கெட் எடுத்த மற்றொரு சுழற்பந்து வீச்சாளர் பிரக்யான் ஓஜா 6 இடங்கள் முன்னேறி 15-வது இடத்துக்கு வந்துள்ளார். இதுவே அவரது அதிகபட்ச தரவரிசை முன்னேற்றம்.

நியூஸிலாந்துக்கு எதிராக விக்கெட் எதுவும் எடுக்காத ஜாகீர் கான் 2 இடங்கள் பின்தங்கி 14-வது இடத்துக்கு வந்துள்ளார். அதே நேரத்தில் உமேஷ் யாதவ் 47-வது இடத்துக்கு வந்துள்ளார். முன்னர் அவர் 49-வது இடத்தில் இருந்தார்.

பந்து வீச்சாளர்கள் பட்டியலில் தென்னாப்பிரிக்காவின் டேல் ஸ்டெயின், சகவீரர் பிலாண்டர், பாகிஸ்தானின் சயீத் அஜ்மல் ஆகியோர் முறைய முதல் 3 இடங்களில் உள்ளனர்.

துடுப்பாட்ட வீரர்கள் பட்டியலில் இந்திய அணித் தலைவர் தோனி 3 இடங்கள் முன்னேறி 40-வது இடத்திலும், கோலி 2 இடங்கள் முன்னேறி 49-வது இடத்திலும் உள்ளனர். நியூஸிலாந்துக்கு எதிராக சதமடித்த இந்தியாவின் புஜாரா, பேட்ஸ்மேன்கள் பட்டியலில் மீண்டும் இடம் பிடித்து 58-வது இடத்தில் உள்ளார்.

இதுவரை முதல் பத்து துடுப்பாட்ட வீரர்கள் பட்டியலில் இருந்த சச்சின், 10-வது இடத்தில் இருந்து 11-வது இடத்துக்குப் பின்தங்கியுள்ளார்.

சுரேஷ் ரெய்னா சறுக்கலை சந்தித்து 80-வது இடத்தில் உள்ளார். முன்பு 73-வது இடத்தில் இருந்தார்.