யாழ் பொது நூலக அழகை குறைத்தது மாநகர சபையினால் பிடுங்கி நடப்பட்ட பனை மரம்

தெற்காசியாவிலே வரலாற்றுப் பழமை வாய்ந்த நூல் நிலையமாக புகழ்பெற்றது யாழ்ப்பாண நூலகம். 1981ம் ஆண்டு எரிவடைந்த நூலகத்தை மீண்டும் யாழ். மாநகர சபை புதுப்பித்து மெருகூட்டியது. பார்ப்பதற்கு மிகவும் ரம்மியமாக தெரிவதால் வெளிநாடுகளில் இருந்து வருகின்ற சுற்றுலாப்பயணிகளும் சரி தென்னிலங்கை சுற்றுலாப் பயணிகளும் சரி யாழ். நூலகத்திற்கு செல்லாது திரும்ப மாட்டார்கள் என்றே கூறலாம்.
 
இருப்பினும் யாழ் மாநகர சபை நூலகப் பகுதியை மேலும் அழகுபடுத்த எண்ணியதோ தெரியவில்லை? விதி அகலிப்பிற்காக நூலகத்திற்கு பின்பக்க வீதியின் ஓரங்களில் வளர்ந்திருந்த கற்பகத்தருவான பனை மரங்களை பிடுங்கி நூலகத்தின் முன்பக்கத்தில் நாட்டுவதற்கான செயற்பாடுகளில் மாநகர சபை மும்முரமாக இறங்கி நாட்டுதலில் வெற்றி கண்டது.
 
ஆனால் அவர்கள் வெற்றி பெறுவோம் என நினைத்தார்களே தவிர பனை மரங்கள் மீண்டும் துளிர்க்கும் என்ற விடயத்தில் தோல்வியையே கண்டனர்.
 
இயற்கையினை ஒரு போதும் மாற்றிட முடியாது ஆனால் அதையும் மாற்றிட முடியும் என யாழ். மாநகர சபை சபதம் எடுத்து தோற்றுப் போய் யாழ். நூலகத்தின் அழகையே குறைத்து விட்டது.
 
பிடுங்கிக் கொண்டு வரப்பட்டு நடப்பட்ட பனை மரங்களும் நாட்டவிருக்கும் பனை மரங்களும் காய்ந்து போய் கிடக்கின்றன. இது துளிர்விடும் நப்பாசையில் நாட்டப்பட்ட பனைமரங்களுக்கு அணையும் கட்டப்பட்டு சில நாட்கள் நீரும் ஊற்றப்பட்டது ஆனால் பலன் கிடைக்கவில்லை. தற்போது தண்ணீரும் இன்றி அகற்றுவாரும் இன்றி பார்ப்பதற்கு மிகவும் மோசமான நிலையில் காணப்படுகின்றது.
 
அத்துடன் நாட்டுவதற்கு என வீதியில் போடப்பட்டுள்ள மரங்களினால் போக்குவரத்துக்கும் இடையூறாக காணப்படுகின்றது. இதனால் போக்குவரத்து செய்பவர்கள் மற்றும் சாரதிப் பயிற்சி பயிற்சிக்கு வருபவர்கள் என சிரமத்ததை எதிர் நோக்குவதாக தெரிவித்துள்ளனர். 
 
துளிர் விடாது காய்ந்து கருகிப் போய் இருக்கும் பனைமரங்கள் அதே இடத்தில் நீண்ட நாட்களாக இருக்கின்றது அதனால் என்ன பயன்? அதனை அகற்றுவதற்கு அகற்றுகுவதற்கு உரிய அதிகாரிகள் இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை. 
 
குறிப்பாக கூறின் மீண்டும் துளிர்க்கக் கூடிய நிலையில் இப் பனை மரங்கள் பிடுங்கப்படவும் இல்லை. எனினும் இச் செயலானது யாழ் மாநகர சபையின் தன்னிச்சையான செயலினால் அகற்றப்பட்டது. அதனால் அதன் வேர்கள் ஆட்டங் காணப்பட்டடதையடுத்து மீண்டும் வளர்வதற்கான தண்மையினை இழந்துள்ளது.
 
இந்த சம்பவம் தொடர்பில் பனை அபிவிருத்தி சபையிடம் கேட்ட  போது யாழ் மாநகர சபையினர் இதுவரை எம்மிடம் எந்த உதவியினையும் நாடவில்லை. இது அவர்களின் தன்னிச்சையான முடிவு. இது தொடர்பில் எம்முடன் கலந்தாலோசித்திருப்பின் நாம் அதற்கான உரிய வழி முறைகளைக் கூறியிருப்பதுடன் தேவையான உபகரணங்களையும் பெற்றுக் கொடுத்திருப்போம்.
 
அத்துடன்  நாம் எமது அமைச்சினால் மனை நாற்றுக்களை வளர்த்து வருகின்றோம். மாநகர சபை விரும்பின் வீதியினையோ அல்லது சில பகுதிகளையோ அழகு படுத்துவதற்கு எங்களுடன் இணைந்து செயற்படுமானால் வெற்றியினைக் காண முடியும் எனவும் தெரிவித்தனர்.