யாழ் சுன்னாகத்தில் அனல் மின் நிலையம் விரைவில் வருகிறது

யாழ்ப்பாண மாவட்டத்திற்கு மின்சார வசதி அளிக்கும் வகையில் யாழ். சுன்னாகம் பிரதேசத்தில் 24 மெகா வோர்ட் மின் உற்பத்தி செய்யும் அனல் மின் நிலையமொன்றை நிர்மாணிக்க நடவடிக்கை எடுத்துள்ளதாக மின்சக்தி எரிசக்தி அமைச்சு தெரிவிக்கறது. இதற்காக மின்சார சபை 4000 மில்லியன் ரூபா முதலீடு செய்ய உள்ளது.

கிளிநொச்சி சுன்னாகம் அதிசக்தி வாய்ந்த மின் பரிவர்த்தனை தொகுதி பூர்த்தி செய்யப்பட்ட பின்னர் கிளிநொச்சி அடங்கலான ஏனைய பிரதேசங்களுக்கு தொடர்ச்சியான மின் விநியோகத்தை வழங்கும் வகையில் இந்த அனல் மின் நிலையம் அமைக்கப்படுகிறது.

மின்சக்தி எரிசக்தி அமைச்சர் சம்பிக ரணவக்கவின் ஆலோசனை பிரகாரம் அமைக்கப்படும் இந்த அனல் மின் நிலையத்தில் 3 இயந்திரங்கள் நிர்மாணிக்கப்படும்.

இலங்கையுடன் இணைந்த உள்நாட்டு கம்பனியான லக்தனவ்வ நிர்மாணப் பணிகளை மேற்கொள்ள உள்ளது. 4மாத காலத்தினுள் நிர்மாணப் பணிகள் பூர்த்தி செய்யப்பட்டு யாழ் தீபகற்பத்திற்கான மின்சார தொகுதியுடன் இணைக்கப்படும் எனவும் அமைச்சு கூறியது. அனல் மின் நிலையத்திற்கான 3 பிரதான உற்பத்தி இயந்திரங்களும் திருகோணமலை துறைமுகத்தை வந்தடைந்தன.

இங்கிருந்து காங்கேசன்துறை வரை எடுத்து வரப்பட்ட இந்த இயந்திரங்கள் நேற்று சுன்னாகம் மின் உற்பத்தி நிலையத்தை வந்தடைந்தன.இந்த திட்டத்தினூடாக யாழ்ப்பாண இளைஞர் யுவதிகள் 150ற்கும் அதிகமானவர்களுக்கு தொழில்வாய்ப்பு கிடைக்க உள்ளது. ஜனவரி மாதம் முதல் 24 மெகாவோர்ட் மின் உற்பத்தி மேற்கொள்ளப்பட உள்ளது. தற்போது 72 வீதமான வடபகுதி மக்களுக்கு மின்சார வசதி வழங்கப்பட்டுள்ளது.