யாழ். கொழும்பு தனியார் பஸ் சேவையில் பல குறைபாடுகள்!- பயணிகள் அவலம்

யாழ். கொழும்பு தனியார் பஸ் சேவையில் பல குறைபாடுகள்!- பயணிகள் அவலம்

யாழ் – கொழும்பு தனியார் பஸ் சேவையானது அடாவடித் தனங்களுடன், எவருக்கும் கட்டுப்படாத அல்லது எவரின் கட்டுப்பாட்டுக்குள்ளும் அடங்காத சண்டியன் குதிரைகள் போல் தற்போது நடத்தப்பட்டு வருகின்றன
இரவில் நடைபெற்று வரும் இரகசியமான சில விபரீத சம்பவங்களுடன், பயணிகளில் கவனமின்மை, வேகக்கட்டுப்பாடின்மை, வழி அனுமதி பத்திரம் இல்லாமை எனப் பல குறைபாடுகளுடன் இச்சேவை நடைபெற்று வருகின்றது.

நீண்ட காலமாக யாழ் – கொழும்பு தனியார் பஸ் சேவையில் பல குறைபாடுகள் இருந்தே வருகின்றபோதும் பயணிகள் அவசர அவசரமாக செல்வது, பஸ் நடைமுறைகள் பற்றி அறிந்து கொள்ளாமை என்பவற்றினால் இக் குறைபாடுகள் வெளியே தெரியவருவதில்லை. ஆனால் தற்போது இவ் பஸ் சேவையினரின் அட்டகாசங்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதனால் பல பிரச்சினைகள் வெளியே தெரிய வருகின்றன.

யாழ் – கண்டி நெடுஞ்சாலையான ஏ 9 பாதை திறக்கப்பட்ட பின்னர் இச்சாலையில் பயணிகள் போக்குவரத்துச் சேவையில் ஈடுபட பல தனியார் பஸ் கம்பனிகள் போட்டி போட்டுக் கொண்டு வந்தன. காரணம் இலங்கையில் இதுவே மிக நீண்டதூர பயணப் பாதையாகும்.

இது அதிக வருமானம் ஈட்டிக் கொள்ளக்கூடிய தொழில். இதனாலேயே பாதை திறந்து விடப்பட்ட சிலகாலத்திற்குள்ளேயே தென்னிலங்கை பஸ் கம்பனிகள் பல ஏ 9 போக்குவரத்து சேவையை தமது கட்டுப்பாட்டுக்குள் எடுத்துக் கொண்டன. அதுபோல் யாழ்ப்பாணத்திலுள்ள சிலரும் இவ்வழி பஸ் சேவைகளுக்கான அனுமதியையும் பெற்றுக் கொண்டனர்.

யுத்தம் முடிவடைந்த பின்னர் ஏ 9 நெடுஞ்சாலைப் பயணம் யாழ்ப்பாண மக்களுக்கு இன்றியமையாததொன்றாகிவிட்டது. யாழ். மாவட்டத்தை ஏனைய வெளிமாவட்டங்களுடன் இணைக்கும் ஒரே ஒரு தரைவழிப்பாதையாக இதுவே முதலில் விளங்கியது. இதனால் இதன் வழி பயணம் செய்வோரின் தொகையும் அதிகரிக்க பஸ்களின் எண்ணிக்கையும் அதிகரித்தது.

இலங்கைப் போக்குவரத்து சபையின் பஸ்களும் இவ் வழிச் சேவையில் ஈடுபட்டபோதும் தனியார் பஸ்களின் சேவை இங்கு இன்றியமையாததொன்றாகிவிட்டது. இதனால் யாழ் -கொழும்பு பஸ் சேவை என ஓர் அலகு உருவாக்கப்படும் நிலை ஏற்பட்டது. தனியார் பஸ் உரிமையாளர்கள் இணைந்து ஒரு சங்கத்தை உருவாக்க வேண்டிய நிலை ஏற்பட்டது.

ஆனால் அது இதுவரை கைகூடியதாகத் தெரியவில்லை. இவ்வழி பயணத்திற்கான பஸ் பயண அனுமதியை தேசிய போக்குவரத்து ஆணைக்குழு வழங்கி வருகின்றது. தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவால் யாழ் -கொழும்பு பஸ் சேவையில் ஈடுபட இதுவரைக்கும் 125 அனுமதிப்பத்திரங்களே வழங்கப்பட்டுள்ளன. இதற்கு மேலதிகமாக இவர்களால் அனுமதிப்பத்திரங்கள் வழங்கப்படவில்லை.

இதன்படி பார்த்தால் 125 பஸ்களே யாழ். கொழும்பு பஸ் சேவையில் ஈடுபடுவதற்கு தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவால் அனுமதிக்கப்பட்டுள்ளன. ஆனால் ஆணைக்குழுவின் அனுமதியையும் மீறி இன்று பல நூறு பஸ்கள் யாழ் -கொழும்பு பஸ் சேவையில் ஈடுபட்டு வருகின்றன.

ஒரு நாளைக்கு கொழும்பிலிருந்து யாழ்ப்பாணம் நோக்கிப் புறப்படும் பஸ்களையும் யாழிலிருந்து கொழும்பு நோக்கிப் புறப்படும் பஸ்களையும் கணக்கெடுத்துப் பார்த்தால் இதன் உண்மை நிலவரம் தெரியவரும்.

யாழ் -கொழும்பு பஸ் சேவையில் ஈடுபடுத்தப்படும் தனியார் பஸ் உரிமையாளர்களிடம் ஒற்றுமையின்மை, கட்டுப்பாடின்மை போன்றவற்றினால் பயணிகள் பெரும் இன்னல்களை எதிர்நோக்கி வருகின்றனர்.

யாழ்ப்பாணம் தனியார் பஸ் சங்கத்தில் இவர்கள் இணைந்து கொள்ளாமையினால் இவர்கள் யாழ். அரசாங்க அதிபரின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டனர். இருப்பினும் அரசாங்க அதிபர் இதில் அதிக அக்கறை காட்டாமையினால் இவர்கள் தாங்கள் நினைத்தபடியே பஸ் சேவையை நடத்தி வருகின்றனர்.

தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவும் அனுமதிப்பத்திரம் வழங்குவதோடு மட்டும் தனது பணியை நிறுத்திக் கொண்டுள்ளது.

இவ்வாறு எவருடைய கட்டுப்பாட்டிற்குள்ளும் இவர்கள் இல்லாததாலும் இவர்களைக் கண்டுகொள்ள யாரும் இல்லாததாலும் இவர்கள் தாங்கள் நினைத்தபடியே பஸ் சேவையை நடத்திச் செல்கின்றார்கள்.

தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவினால் தனியார் பஸ்களுக்கென யாழ். மத்திய பஸ் தரிப்பு நிலையத்திற்கு அருகில் இடம் ஒன்று ஒதுக்கப்பட்டுள்ளது. இங்கிருந்துதான் வெளி மாவட்டங்களுக்கு தனியார் பஸ்கள் செல்கின்றன.

அதுபோல் யாழ் -கொழும்பு பஸ்களும் இங்கிருந்துதான் புறப்படுகின்றன. ஆனால் இது தொடர்பாக பயணிகளுக்குத் தெரியாது. இன்று அவர்கள் கொழும்பு செல்வதானால் பண்ணை பஸ் தரிப்பிடத்திலிருந்து புறப்படும் பஸ்களையே நாடிச் செல்கின்றனர். இங்கிருந்து புறப்படும் அனேகமான பஸ்கள் ஏ 9 வழி அனுமதிப் பத்திரம் பெற்றுக்கொள்ளாத பஸ்களாகும். இவைதான் இடைநடுவில் பொலிஸாரால் சோதனையிடப்பட்டு மாட்டிக்கொள்பவையாகும். இது தொடர்பில் மக்கள் விழிப்படைய வேண்டும்.

பரபரப்பான இந்த உலக வாழ்க்கையில் பகலில் மட்டும் மக்கள் சுறுசுறுப்பாக இருப்பார்கள். இரவில் வீடுகளில் தமது குடும்பங்களுடன் இணைந்திருப்பார்கள். இதனால் இரவில் யாழ். நகரின் மத்தியில் நடக்கும் சம்பவங்களோ, இரவு பஸ் பயணத்தின்போது நடந்தேறும் சம்பவங்களோ இவர்களுக்குத் தெரிவதில்லை. அடுத்தநாள் காலையிலேயே பத்திரிகைகளைப் பார்க்கும்போது தெரியவரும்.

இரவு நேரத்தில் பஸ் பயணத்தின்போது நடந்தேறும் சம்பவங்களை பயணிப்போர் மட்டுமே தெரிந்து கொள்வார்கள். அவர்களும் பயணம் முடிந்த பின் அதனை மறந்து விடுவார்கள். அல்லது மறக்க முயற்சிப்பார்கள்.

தனியார் பஸ் சேவை நடத்துவோர் பயணிகளின் நலன்களில் அக்கறை கொள்வதில்லை. தாங்கள் நினைத்தபடியே நடந்து கொள்கின்றனர்.

யாழ் – கொழும்பு போக்குவரத்துச் சேவையில் ஈடுபடும் பஸ்களில் இவ் அடாவடித்தனம் அதிகரித்து வருகிறது. பஸ் ஓட்டுநர்களிலும் நடத்துநர்களிலும் நம்பிக்கை வைத்துப் பயணிக்கும் பயணிகளின் நலன்களில் அவர்கள் அக்கறை காட்டுவதில்லை.

அவர்கள் நினைத்த இடத்தில் பஸ்ஸை நிறுத்துவதும் நினைத்த நேரத்தில் மட்டும் பயணத்தைத் தொடர்வதும் என தங்களின் எண்ணப்படியே நடந்து கொள்கிறார்கள். யாழ் – கொழும்பு பஸ் பயணம் என்றால் முறிகண்டிப் பிள்ளையாரும் கச்சானும்தான் உடனே ஞாபகத்திற்கு வரும்.

ஏனென்றால் ஏ 9 வீதியால் செல்லும் பஸ்கள் அனைத்தும் அங்கு தரித்து நின்று பயணிகளின் தேவைகளுக்கேற்ப நடந்து கொள்வார்கள். ஆனால் இன்று அப்படிச் செல்லும் பஸ்களைக் காணமுடிவதில்லை. பஸ் ஓட்டுநரின் விருப்பத்திற்கேற்ற இடத்திலேயே பஸ் நிறுத்தப்படுகின்றது. அவ்விடத்தில் பயணிகள் அனைவருக்கும் போதுமான அளவு உணவு இருக்கோ இல்லையோ அது பற்றி அவருக்கு கவலையில்லை.

உன்னை நான் இந்த பஸ்ஸில் ஏறச் சொன்னனானா? என்ற இறுமாப்பான போக்கு இவர்களிடம் காணப்படும். அத்துடன் முறையற்ற விதத்திலும் பஸ்ஸை ஓட்டிச் செல்வது, அதனால் விபத்தில் சிக்கிக் கொள்வது என விபரீதமான செயற்பாடுகளும் தொடர்கின்றன. பஸ்ஸில் மனித உயிர்கள் இருக்கின்றன என்ற எண்ணம் இவர்களுக்கு ஏற்படுவதில்லை.

அதிவேகமாக பஸ்ஸை செலுத்தி விபத்துக்குள்ளாகி உயிரிழப்புக்களும் ஏற்படுகின்றது. ஓட்டுநர்களினதும் நடத்துநர்களினதும் அநாகரீகமான பேச்சுக்களும் அச்சுறுத்தும் தொனியிலான கட்டளையிடல்களும் என பயணிகள் பல அசௌகரியங்களை எதிர் நோக்கிக்கொண்டே பயணிக்கின்றனர்.

இடைவழியில் இறக்கிவிடப்பட்ட பயணி

அண்மையில் ஓர் பெண் பயணிக்கு ஏற்பட்ட விபரீதமான அனுபவம். பயிற்சிப்பட்டறை ஒன்றிற்காக யாழிலிருந்து சென்ற குழுவினர் கடந்த 01.07.2012 அன்று இரவு கொழும்பிலிருந்து யாழ். வருவதற்காக தனியார் பஸ்ஸின் வெள்ளவத்தை புக்கிங் சென்ரர் ஒன்றில் தமது பதிவினை மேற்கொண்டு தமது பயணத்தினை உறுதி செய்திருந்தனர்.

இவர்கள் 119 வரையான சீற்றுக்களுக்கு முற்பதிவு செய்து பணத்தை கட்டியிருந்தனர். யாழ்ப்பாணத்திலுள்ள பிரபல முருகன் பெயரினைக் கொண்ட தனியார் பஸ், அவர்களின் பயிற்சி நிலையத்தில் அவர்களை ஏற்றிக்கொண்டு கொழும்பிலுள்ள தனது வழமையான சேவை நிலையத்தின் முன்பாக ஏனைய பயணிகளையும் ஏற்றுவதற்காகத் தரித்து நின்றது.

திடீரென பஸ் நடத்துனர் அவர்களை வேறுவேறு இருக்கைகளில் இருக்குமாறு பணித்தார். இதனால் குழப்பமடைந்த அக் குழுவினர் தமக்கு 120 வரை சீற்றுக்கள் வழங்காத காரணத்தைக் கேட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அந்நிலையில் பஸ் சாரதி மிகக் கடுமையான அநாகரிகமான வார்த்தைப் பிரயோகத்தை மேற்கொண்டதுடன் அவர்களை பஸ்ஸிலிருந்து பலவந்தமாக வெளியேற்றியுள்ளார்.

இதனால் அக்குழுவினர் விரக்தியடைந்து அவ் பஸ்ஸில் பயணிக்க மறுத்தனர். இந்நிலையில் பஸ் சாரதியை மாற்றி பயணத்தை மேற்கொள்ள தீர்மானிக்கப்பட்டது. ஆயினும் குழுவினர் அதற்கு மறுத்து பணத்தை திருப்பித் தரும்படி கேட்டுள்ளனர்.

பதிவு செய்த பணத்தை மீளத் தரமுடியாதென பஸ் உரிமையாளர் கூறியதாகவும் பஸ் நடத்துனர் தமது சம்பளப் பணத்தில் கழித்து விடுவாரெனவும் மூன்று பேராவது வருமாறு மன்றாட்டமாகக் கேட்டுக்கொண்டதற்கிணங்க இப்பெண்மணி தனது பிள்ளைகள் இருவருடன் அந்த பஸ்ஸில் பயணத்தை தொடர்ந்தார்.

இந்த பஸ் போக்குவரத்திற்கான உரிமத்தை பெற்றிருக்காத காரணத்தால் வரும் வழியில் போக்குவரத்து பிரிவினராலும், பொலிசாராலும் தடுத்து நிறுத்தப்பட்டு உடனடித் தண்டப்பணமும் வழக்குப் பதிவும் மேற்கொள்ளப்பட்டுள்ளது. 10.30 மணிக்கு கொழும்பு நகரை விட்டு வெளியேறி பயணித்தது பஸ். இதன்போதுதான் இவ்விபரீதம் நடந்தேறியது.

ஆள் நடமாட்டமில்லாத சிங்களப் பகுதியில் அப்பெண்மணியும் இரண்டு பிள்ளைகளும் பஸ் ஓட்டுநருக்கு வந்த பஸ் உரிமையாளரின் கைத்தொலைபேசி உத்தரவின் பேரில் நள்ளிரவு 11 மணிக்கு வலுக்கட்டாயமாக இறக்கப்பட்டனர். பஸ் உரிமையாளருடன் கைத்தொலைபேசி மூலம் தொடர்பு கொள்ளும் முயற்சியில் இவர் ஈடுபட்டபோது ஏற்பட்ட இழுபறியில் கைத்தொலைபேசி சேதமாக்கப்பட்டது.

மிகுந்த சிரமத்தின் மத்தியில் நீண்ட தூரம் நடந்து பின்னர் ஆட்டோ ஒன்றிற்கு மேலதிக பணம் செலவழித்து ஜாஎல சந்தி சென்று அங்கிருந்து கொழும்பு நகர் பஸ் தரிப்பு நிலையம் சென்று இரவு 12 மணிக்கு இலங்கை போக்குவரத்துச்சபையின் பஸ்ஸில் ஏறியுள்ளார். இதனால் இவரால் யாழ்ப்பாணத்திற்கு உரிய நேரத்திற்கு வரமுடியாது போனது. வேலைத்தளத்திற்குச் செல்ல முடியவில்லை. பிள்ளைகள் பாடசாலைக்கும் செல்ல முடியவில்லை.

இத்தகைய வழி அனுமதியற்ற பஸ் ஓட்டுநரின், நடத்துனரின் அடாவடித்தனத்தால் இவருக்கு 15 ஆயிரத்துக்கும் அதிகமான பணம் வீண் விரயமாக்கப்பட்டுள்ளது. மிகுந்த மனவிரக்திக்குள்ளான இப் பெண்மணிக்கு இதுவரைக்கும் எவரிடத்திலிருந்தும் நியாயமோ நஷ்டஈடோ பெற்றுக் கொடுக்கப்படவில்லை.

இவ்வாறு நடைபெறும் பல விபரீதமான சம்பவங்களில் ஒரு சில சம்பவங்களே வெளியே தெரியவருகின்றன. பயணம் தானே பொறுமையாக இருந்து விட்டுப் போவோம் என பயணிகள் இருப்பதினால் பஸ் ஓட்டுநர்களினதும் நடத்துநர்களினதும் அடாவடித்தனங்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றது.

இவர்களோடு முரண்டு பிடிப்பவர்கள், நியாயம் கேட்பவர்கள், பணத்தின் மீதிகளைக் கேட்பவர்களுக்கு உயிர் போகும் அளவுக்கு அச்சுறுத்தல்களும் பயமுறுத்தல்களும் தான் இவர்களினால் கிடைக்கின்றன. எனவே இதற்கு பொறுப்புடையவர்கள் இதில் கவனம் எடுத்து இதனை சீரான நடைமுறைக்குக் கொண்டு வரவேண்டும்.

போக்குவரத்துப் பிரிவு பொலிஸாரும் இவ்விடயத்தில் கவனம் செலுத்த வேண்டும். யாழ் -கொழும்பு பஸ் சேவையில் ஈடுபடும் பஸ்ஸின் ஓட்டுநர்களும் நடத்துனர்களும் பயணிகளுடன் மனிதாபிமான முறையில் நடந்து கொள்ள வேண்டும். இப்பகுதி போக்குவரத்துச் சேவை யாருடைய கட்டுப்பாட்டுக்குள் உள்ளதோ அவர்கள் இதில் கவனம் செலுத்த வேண்டியது காலத்தின் கட்டாய தேவையாகவுள்ளது.