யாழில் மனநிலை பாதிக்கப்பட்ட பெண்கள் மீதான பாலியல் வல்லுறவுச் சம்பவங்கள் அதிகரிப்பு : டி.ஐ.ஜி

யாழ்.தெல்லிப்பளை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் மனநிலை பாதிக்கப்பட்ட 17 வயது சிறுமியை பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்திய சந்தேக நபர் நிட்டம்புவ பிரதேசத்தில் தலைமறைவாகி இருந்த நிலையில் நேற்றுக் கைது செய்யப்பட்டுள்ளதாக யாழ்.பிராந்திய பிரதிப் பொலிஸ் மா அதிபர் எரிக் பெரகரா தெரிவித்தார்

யாழ்.பொலிஸ் சிரேஷ்ட அத்தியட்சகர் அலுவலகத்தில் இன்று சனிக்கிழமை நடைபெற்ற வராந்த ஊடகவியலாளர் மாநாட்டில் அவர் இதனை தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

22 வயதுடைய மனநிலை பாதிக்கப்பட்ட பெண் ஒருவர் அச்சுவெலிப் பகுதியில் பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தப்பட்டுள்ளார். யாழில் பாலியல் வல்லுறவுச் சம்பவங்கள் அதிகரித்துச் செல்வது தொடர்பில் பல முறைப்பாடுகள் கிடைக்கப் பெற்றுள்ளன. இதற்கான நடவடிக்கைகளை நாம் மேற்கொண்டு வருகின்றோம் எனறார்.

இதேவேளை, யாழ்.குடாநாட்டில் சென்ற வாரம் இடம்பெற்ற குற்றச் செயல்கள் தொடர்பான விபரங்களை அவர் இதன்போது வெளியிட்டார்.

யாழ்ப்பாணத்தில் காசோலைகள் மோசடி தொடர்பான முறைப்பாடுகள் அதிகளவு பதியப்பட்டுள்ளன. நவாலிப் பகுதியில் வாளால் இருவர் வெட்டிக் காயப்படுத்தப்பட்டுள்ளனர்.

மானிப்பாய் பொலிஸ் பிரிவில் 22,000 ரூபா பெறுமதியான கையடக்கத் தொலைபேசியைத் திருடிய சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

மானிப்பாய் வைத்தியசாலை வீதியில் 10 இலட்சம் பெறுமதியான இலத்திரணியல் சாதனங்கள் கொள்ளையடிக்கப்பட்டுள்ளன.
சுன்னாகம் பகுதியில் விடு உடைக்கப்பட்டு தங்க நகைகள் மற்றும் வீட்டுச் பொருட்கள் திருடப்பட்டுள்ளன என்று அவர் மேலும் குறிப்பிட்டார்.