மோடிக்கு எதிரான வழக்கு: 12ம் திகதி முதல் வாதம்

மோடிக்கு எதிரான வழக்கு: 12ம் திகதி முதல் வாதம்

2012ம் ஆண்டு குஜராத் சட்டப்பேரவை தேர்தலின்போது, வேட்பு மனுவில் தனது மனைவி குறித்து தகவல் தெரிவிக்காத பிரதமர் நரேந்திர மோடி மீது வழக்குப்பதிவு செய்ய உத்தரவிடும்படி தொடரப்பட்ட வழக்கு மீதான வாதம், இம்மாதம் 12ம் திகதி முதல் நடைபெறும் என்று ஆமதாபாத் நீதிமன்றம் அறிவித்துள்ளது. 

இதுதொடர்பான வழக்கு, ஆமதாபாத் நீதிமன்றத்தில் கூடுதல் தலைமை ஜூடிசியல் மாஜிஸ்திரேட் எம்.எம். ஷேக் முன்னிலையில் சனிக்கிழமை விசாரணைக்கு வந்தது. 

அப்போது, மோடிக்கு எதிராக வழக்கு தொடர்ந்த ஆம் ஆத்மி கட்சி நிர்வாகி நிஷாந்த் வர்மாவின் வாக்குமூலத்தை நீதிமன்றம் பதிவு செய்தது. 

அதனைத் தொடர்ந்து இந்த வழக்கு மீதான வாதம், இம்மாதம் 12ம் திகதி முதல் நடைபெறும் என்று நீதிமன்றம் அறிவித்தது. 

கடந்த மே மாதம் 21ம் திகதி நீதிமன்றத்தில், ஆமதாபாத் குற்றவியல் போலீஸார் தாக்கல் செய்த அறிக்கையில், இந்த விவகாரத்தில் மோடி குற்றம் எதுவும் புரியவில்லை என்று தெரிவிக்கப்பட்டிருந்தது. 

முன்னதாக இந்த விவகாரம் தொடர்பாக மோடிக்கு எதிராக வழக்குப்பதிவு செய்யும்படி, ரண்தீப் பொலிஸ் நிலையத்தில் நிஷாந்த் வர்மா புகார் தெரிவித்தார். 

குஜராத் சட்டப்பேரவை தேர்தலின்போது மோடி போட்டியிட்ட மணிநகர் சட்டப்பேரவை தொகுதியில், தேர்தல் அதிகாரியாகப் பணியாற்றிய பி.கே. ஜடேஜா மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார். 

ஆனால் நிஷாந்த் வர்மாவின் புகாரை பதிவு செய்ய பொலிஸார் மறுத்துவிட்டனர். இதனையடுத்து மோடிக்கு எதிராக வழக்குப்பதிவு செய்ய பொலிஸாருக்கு உத்தரவிடும்படி நீதிமன்றத்தில் நிஷாந்த் வர்மா வழக்கு தொடர்ந்துள்ளார். 

2012ஆம் ஆண்டு குஜராத் சட்டப்பேரவை தேர்தலில், மணிநகர் தொகுதியில் நரேந்திர மோடி போட்டியிட்டு வெற்றி பெற்றார். இத்தேர்தலில் அவர் தாக்கல் செய்த வேட்பு மனுவில், தனது மனைவி யசோதா பென் குறித்து தகவல் தெரிவிக்கவில்லை. எனினும், சமீபத்தில் நடைபெற்ற மக்களவைத் தேர்தலில் வதோதரா தொகுதியில் போட்டியிடுவதற்காக தாக்கல் செய்த வேட்பு மனுவில், முதல்முறையாக தனது மனைவி யசோதா பென் குறித்த தகவலை மோடி வெளியிட்டிருந்தார்.