மோடிக்கு அமெரிக்க நீதிமன்றம் அழைப்பாணை

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி அமெரிக்காவுக்கு தனது விஜயத்தைத் தொடங்கவுள்ள நிலையில், அவருக்கு நியூயார்க் நீதிமன்றம் அழைப்பாணை ஒன்றை அனுப்பியுள்ளது. 

குஜராத் மாநிலத்தில் 2002ம் ஆண்டில் நடைபெற்ற கலவரங்களில் அவர் ஆற்றியதாகக் கூறப்படும் பங்கு தொடர்பாக இந்த அழைப்பாணை அனுப்பப்பட்டிருக்கிறது அமெரிக்க நீதிமையம் என்ற மனித உரிமை அமைப்பும் குஜராத் கலவரங்களில் உயிர்தப்பியோர் இருவரும் சேர்ந்து இந்த வழக்கைத் தொடுத்திருக்கின்றனர். 

இந்தக் கலவரங்களில் 1000க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர். இவர்களில் பெரும்பாலோனோர் முஸ்லீம்கள். மோடியை இந்திய நீதிமன்றங்கள் இந்தக் கலவரங்கள் தொடர்பான வழக்குகளில் குற்றமற்றவர் என்று கூறி தீர்ப்பளித்திருக்கின்றன. 

இந்தக் கலவரங்களில் மோடிக்கு இருந்ததாகக் கூறப்படும் தொடர்பு காரணமாக, சமீபத்தில் நடந்து முடிந்த இந்திய நாடாளுமன்றத் தேர்தல்களில் அவரது பெரு வெற்றிக்கு முன்னதாக, அமெரிக்க விசா அவருக்கு மறுக்கப்பட்டிருந்தது. 

இருப்பினும் மோடி இன்று வெள்ளிக்கிழமை நியூயார்க் சென்று ஐ.நா பொதுச்சபையில் உரையாற்றவிருக்கிறர். அவர் பின்னதாக அமெரிக்க அதிபர் பராக் ஒபாமாவையும் சந்திக்கவிருக்கிறார்.