மீள்வருகை தொடர்பில் அஜந்த மென்டிஸ் மகிழ்ச்சி

டந்த 9 மாதங்களுக்கும் மேலாக கிரிக்கெட் போட்டிகளில் பங்குபற்றியிருக்காத இலங்கை அணியின் சுழற்பந்து வீச்சாளர் அஜந்த மென்டிஸ், சிம்பாப்வே அணிக்கெதிராக ஹம்பாந்தோட்டையில் இடம்பெற்ற போட்டியில் மிகச்சிறப்பான திறமை வெளிப்பாட்டை மேற்கொண்டிருந்தார்.

அவர் சிம்பாப்வே அணிக்கெதிராக 8 ஓட்டங்களுக்கு 6 விக்கெட்டுக்களைக் கைப்பற்றியிருந்தார்.

இந்நிலையில் தனது திறமை வெளிப்பாடு தொடர்பாகக் கருத்துத் தெரிவித்துள்ள அஜந்த மென்டிஸ், அது குறித்து மகிழ்ச்சியடைவதாகத் தெரிவித்தார்.

போட்டிகளில் பங்குபற்ற முடியாத காலங்கள் மிகுந்த வேதனையாக அமைந்திருந்ததாகத் தெரிவித்த அஜந்த மென்டிஸ், தனது சக வீரர்கள் போட்டிகளில் பங்குபற்றிக் கொண்டிருக்கும் போது அதைத் தொலைக்காட்சியில் பார்த்துக் கொண்டிருக்கும் போது மிகுந்த கடினமாக இருக்கும் எனத் தெரிவித்தார்.

போட்டிகளில் பங்குபற்றியிருக்காத 9 மாதங்களில் பெரும்பாலான மாதங்களில் தான் கிரிக்கெட் பந்தைத் தொட்டிருக்கும் வாய்ப்பே கிடைத்திருக்கவில்லை எனத் தெரிவித்த அஜந்த மென்டிஸ், எனினும் அக்காலத்தில் ஏனைய பயிற்சிகளையும், வீடியோக்களையும் பார்த்ததோடு, சில கிரிக்கெட் சம்பந்தமான பகுப்பாய்வுகளை மேற்கொண்டதாகவும் தெரிவித்தார்.

தனது பந்துவீச்சு முறை காரணமாகவே தனது அதிக முதுகு உபாதைகள் ஏற்படுவதாகத் தெரிவிக்கப்பட்டதாகவும், அதன் காரணமாக தனது பந்து வீச்சு முறையை மாற்ற வேண்டியிருந்ததாகவும் தெரிவித்த அஜந்த மென்டிஸ், முதலாவது போட்டியில் தனது பெறுபேறுகள் குறித்துத் திருப்தியடைவதாகவும் தெரிவித்தார்.