மாவோயிஸ்டுகளை இரும்புக்கரம் கொண்டு ஒடுக்க முடிவு

மாவோயிஸ்டுகளை இரும்புக்கரம் கொண்டு ஒடுக்க இந்திய மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இதற்காக சட்டிஸ்கர் மாநிலத்திற்கு கூடுதலாக 10000 துணை இராணுவ படைகளையும், இரண்டு ஹெலிகாப்டர்களையும் வழங்க முடிவு செய்துள்ள மத்திய அரசு 2000 பொறியாளர்களை பயன்படுத்தி இடது சாரி தீவிரவாத இயக்கத்தின் தாக்குதலுக்கு பதிலடி கொடுக்க தயாராகி வருகிறது. 

அம்மாநில முதலமைச்சரான ராமன் சிங்குடன் நேற்று நடைபெற்ற பேச்சுவார்த்தையின் போது மாவோயிஸ்டுகளின் நடமாட்டம் குறித்து விரிவாக பேசிய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் இந்த முடிவை எடுத்துள்ளார். 

இப்பேச்சுவார்த்தையின் போது மத்திய உள்துறை இணை அமைச்சர் கிரண் ரிஜ்ஜு, மத்திய உள்துறை செயலர் அனில் கோஸ்வாமி, துணை இராணுவப்படை தளபதிகள் மற்றும் திட்ட கமிஷன் மூத்த அதிகாரிகள் ஆகியோர் உடனிருந்தனர். 

இப்பேச்சுவார்த்தையின் முடிவில் வரும் இரண்டு அல்லது நான்கு மாதங்களுக்குள் அங்குள்ள பஸ்தார் பகுதியில் கூடுதலாக 10000 துணை இராணுவ படையினரை நிறுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. இது தவிர அம்மாநில அரசின் திட்டப்பணிகளுக்கு வனத்துறையின் தடையில்லா சான்றை உடனுக்குடன் வழங்கவேண்டும் என கேட்டபோது, என்ன செய்யமுடியும் என்பதை அறிந்து அதற்கேற்ப நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என கூறப்பட்டுள்ளது.