மாயமான விமானம் பற்றி துப்பு கொடுத்தால் 30 கோடி

மூன்று மாதங்களுக்கு முன்பு நடுவானில் மர்மமான முறையில் காணாமல் போன மலேசிய விமானம் குறித்து தகவல் கொடுப்பவர்களுக்கு 50 லட்சம் அமெரிக்க டாலர் (இந்திய மதிப்பில் சுமார் ரூ. 29.6 கோடி) சன்மானம் வழங்கப்படும் என்று அந்த விமானத்தில் பயணம் செய்தவர்களின் உறவினர்கள் அறிவித்துள்ளனர். 

மாயமான விமானம் குறித்த தகவல்களை மலேசிய அரசு மூடி மறைப்பதாகவும், சன்மானத் தொகை அறிவிப்பதன் மூலம் சிலர் தகவல்களை அளிக்க முன்வரக் கூடும் என்றும் அவர்கள் நம்புகிறார்கள். 

இதற்கான செலவுத் தொகையை இணையதளம் மூலமாக வசூலிப்பதற்கும், அதில் ஒரு தொகையை, விமானம் குறித்து விசாரணை நடத்தவுள்ள தனியார் புலனாய்வுக் குழுவுக்கு செலவிடவும் அவர்கள் திட்டமிட்டுள்ளனர். 

இதுகுறித்து, இந்தத் திட்டத்தின் ஒருங்கிணைப்பாளர் எத்தான் ஹண்ட் கூறுகையில், "விமானத்தைப் பற்றிய தகவல்களை சிலர் தெரிந்து வைத்திருப்பார்கள். 

சன்மானம் அறிவித்திருப்பதன் மூலம் தகவல்களைக் கொடுக்க அவர்கள் முன்வருவார்கள் என்று நம்புகிறோம்´ என்றார். 

5 இந்தியர்கள் உள்பட 239 பயணிகளுடன் கோலாலம்பூரில் இருந்து பீஜிங்கிற்கு, கடந்த மார்ச் மாதம் 8ஆம் திகதி புறப்பட்டுச் சென்ற விமானம், நடுவானில் சென்று கொண்டிருந்தபோது, மர்மமான முறையில் மாயமானது. 

அந்த விமானம் இந்தியப் பெருங்கடலின் தெற்குப் பகுதியில் நொறுங்கி விழுந்திருக்கலாம் என்று கருதப்பட்டது. இதையடுத்து, கடல் பகுதியில் தீவிரமாகத் தேடியபோதும், அதற்கான தடயம் எதுவும் கிடைக்கவில்லை. 

இதையடுத்து, அந்த விமானத்தை வேண்டுமென்றே சிலர் வேறுபாதையில் திருப்பியிருக்கலாம் என்று தற்போது கருதப்படுகிறது. 

இந்நிலையில், அந்த விமானம் கடத்தப்பட்டதா? அதில் விமானிக்கு தொடர்பு உள்ளதா? தீவிரவாதிகளின் நாசவேலையா? என்பது உள்ளிட்ட பல்வேறு கோணங்களில் புலனாய்வு அமைப்பினர் விசாரணை நடத்தி வருகிறார்கள்.