போராளிகளை ஒடுக்க உதவி கேட்கும் ஈராக்

ஈராக்கில் அரசுப் படைகளுக்கு எதிராக போராடி வரும் ´இசிஸ்´, ´இசில்´ மற்றும் இதர போராளிக் குழுவினர் அந்நாட்டின் பல முக்கிய பகுதிகளை கைப்பற்றி தங்களது ஆதிக்கத்தில் வைத்துள்ளனர். 

தலைநகர் பாக்தாத்தையும் கைப்பற்றும் நோக்கத்தில் நாற்புறமும் முற்றுகையிட்டு வரும் எதிரிகளின் வேகத்துக்கு ஈடு கொடுக்க முடியாமல் ரானுவம் திணறி வருகிறது. இதற்கிடையில், ஈராக்கில் உள்ள ´கர்பலா´ உள்ளிட்ட புனிதத் தலங்களை போராளிகள் தாக்கி அழிக்கக் கூடும் என்ற அச்சமும் மேலோங்கி வருகிறது. 

இந்த தாக்குதலை முறியடிக்கும் வகையில் ஈராக்குக்கு ராணுவ உதவி வழங்க தயாராக இருப்பதாக இதுவரை பகை நாடாக இருந்த ஈரான் அறிவித்துள்ளது. இந்நிலையில், போராளிகளை ஒடுக்கி, அழிக்க அமெரிக்க விமானப்படையின் உதவியை ஈராக் அரசு கோரியுள்ளது. 

ஈராக்குக்கு அமெரிக்க விமானப்படை அனுப்பப்படுமா? என்ற கேள்விக்கு பதில் அளித்த அமெரிக்க கூட்டுப் படையின் தலைவரான ஜெனரல் மார்ட்டின் டெம்ப்ஸி, நேரடியாக பதில் அளிக்காமல், ´இசில்´ போராளிகளை எங்கே பார்த்தாலும் அவர்களை அழிக்க வேண்டியது நமது நாட்டின் பாதுகாப்பு தொடர்பானது என்று சூசகமாக கூறியுள்ளார். 

எனவே, ஈராக்குக்கு அமெரிக்க விமானப் படைகள் அனுப்பப்படும் என தெரிகிறது.