புலி உருவத்தை பச்சை குத்தியிருந்த இளைஞர் யாழில் கைதாகி விடுதலை

புலி உருவத்தை பச்சை குத்தியிருந்த இளைஞர் யாழில் கைதாகி விடுதலை

நல்லூர் கந்தன் ஆலய உற்சவத்தில் கலந்து கொண்டிருந்த இளைஞர் ஒருவர் புலி உருவத்தை பச்சை குத்தியிருந்ததால் பொலிஸாரால் கைதான சம்பவம் நேற்று இடம்பெற்றது.

தனது தாயாருடன் ஆலய உற்சத்தில் கலந்துகொண்டிருந்த 27 வயதான மேற்படி இளைஞரின் கையில் புலி உருவம் குத்தப்பட்டிருப்பதை அவதானித்த பொலிஸார் அவ்விளைஞரை கைது செய்தனர்.

அவ்விளைஞர் யாழ். நீதவான் மா. கணேசராசா முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டார். எனினும், அவருக்கு எதிராக பொலிஸார் குற்றச்சாட்டுகள் எதையும் முன்வைக்காத நிலையில் அவ்விளைஞரை நீதவான் விடுதலை செய்தார். பிரான்ஸில் இளைஞர்கள் பச்சைக்குத்திக்கொள்வது வழக்கமான நடவடிக்கையாகும் என அந்த இளைஞரின் தாயார் தெரிவித்தார்.

இவ்விடயம் தொடர்பாக யாழ். பொலிஸ் தலைமையக இன்ஸ்பெக்டர் சமன் சிஹேர கூறுகையில்...

“பிரான்ஸை பிறப்பிடமாகக் கொண்ட இளைஞன் தனது கையில் புலிச் சின்னத்தை பச்சை குத்தியிருந்ததால் நேற்று கைது செய்யப்பட்டார். அவரது தாயார் யாழ்ப்பாணத்தை பிறப்பிடமாகக் கொண்டவர். கைதான இளைஞனிடம் நாங்கள் விசாரணைகளை மேற்கொண்டோம். விசாரணைகளின் முடிவில் அவ்விளைஞனுக்கும் புலிகளுக்கும் எந்தவித தொடர்பும் இல்லை என தெரியவந்தது. பச்சை குத்துமிடத்தில் குறித்த சின்னம் தன்னை கவர்ந்ததால் தான் அதனை பச்சை குத்திக் கொண்டதாக அவ்விளைஞன் விசாரணைகளின்போது எம்மிடம் தெரிவித்தார். ஆகையினால் நீதவான் எந்தவித தண்டனையுமின்றி அவ்விளைஞனை விடுதலை செய்தார்” என்று கூறினார்.