பிரணாப் - மஹிந்த - மன்மோகன் இன்று சந்திப்பு

இந்திய குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி, பிரதமர் மன்மோகன் சிங் ஆகியோரை இலங்கை ஜனாதிபதி இன்று (20) மாலை சந்தித்துப் பேசவுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இந்தியாவில் 4 நாள்கள் உத்தியோக பூர்வ பயணத்தை மேற்கொண்டுள்ள ஜனாதிபதி நேற்று மாலை டில்லியை சென்றடைந்துள்ளார். மத்திய அரசு ஜனாதிபதிக்கு சிவப்புக் கம்பள வரவேற்பை அளித்தது.

குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜியை அவரது மாளிகையில் இன்று மாலை 5 மணிக்கு சந்தித்துப் பேசுகிறார்.

பின்னர், பிரதமர் மன்மோகன் சிங்கை அவரது இல்லத்தில் இரவு 7 மணிக்குச் சந்தித்துப் பேசுகிறார்.

மத்தியப் பிரதேச மாநிலம் சாஞ்சியில் அமைக்கப்படவுள்ள பௌத்தமத மற்றும் அறிவுசார் பல்கலைக்கழகத்துக்கான அடிக்கல்லை ஜனாதிபதி மஹிந்த நாளை நாட்டுகிறார்.

அவரது வருகைக்கு சில தமிழ் அரசியல் கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. சாஞ்சியில் போராட்டம் நடத்தவும் திட்டமிட்டுள்ளன. இதனால் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக இந்திய தகவல்கள் தெரிவிக்கின்றன.