பின்லேடன் தாக்குதல் பற்றி ஏன் பாக்.கிற்கு அறிவிக்கவில்லை தெரியுமா?

பின்லேடன் தாக்குதல் பற்றி ஏன் பாக்.கிற்கு அறிவிக்கவில்லை தெரியுமா?

அமெரிக்காவில் கடந்த 2001-ம் ஆண்டு செப்டம்பர் 11ம் திகதி நியூயார்க்கிலும், வாஷிங்டனிலும் பாரிய தாக்குதல்கள் நடத்தி ஆயிரக்கணக்கானோரை கொன்று குவித்த அல்கொய்தா தீவிரவாதிகளின் தாக்குதல்களை மூளையாக இருந்து நடத்தியவர் சர்வதேச பயங்கரவாதி பின்லேடன். 

பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத் அருகேயுள்ள அபோத்தாபாத் என்ற இடத்தில் பதுங்கியிருந்த பின்லேடனை அமெரிக்கா கடந்த 2011-ம் ஆண்டு மே மாதம் 2ம் திகதி அதிரடி தாக்குதல் நடத்தி கொன்றது. 

இந்தத் தாக்குதலை நடத்தப்போவது குறித்து பாகிஸ்தானிடம் அமெரிக்கா எந்தவொரு தகவலும் கூறவில்லை. 

இதுபற்றி அப்போதைய அமெரிக்க வெளிவிவகார அமைச்சர் ஹிலாரி கிளிண்டன், தற்போது எழுதி வெளியிட்டுள்ள புத்தகம் ஒன்றில் குறிப்பிட்டிருக்கிறார். 

அதில் அவர், “பாகிஸ்தான் உளவு அமைப்பான ஐ.எஸ்.ஐ.யில் உள்ள சில சக்திகள், அல்கொய்தா தீவிரவாதிகளுடனும், தலீபான் தீவிரவாதிகளுடனும் நல்லுறவைப்பேணி வருவது எங்களுக்குத் தெரியும். 

இதற்கு முன்பு இத்தகைய தாக்குதல் நடவடிக்கை பற்றிய தகவல்கள் முன்கூட்டி கசிந்து அதனால் பாதிக்கப்பட்டிருக்கிறோம். இந்த தாக்குதல் நடவடிக்கையும் மிகப்பெரிய நடவடிக்கை. எனவேதான் இதுகுறித்து முன்கூட்டியே பாகிஸ்தானிடம் தெரிவிக்கவில்லை” என கூறி உள்ளார்.