பாகிஸ்தான் அணியை வெற்றிப்பாதைக்கு அழைத்து சென்ற மக்சூத்

உலகக்கிண்ண 20 ஓவர் கிரிக்கெட் பயிற்சி ஆட்டத்தில் பாகிஸ்தானும் நியூசிலாந்தும் மோதின. மிர்புரில் நடைபெற்ற இந்த ஆட்டத்தில் நாணய சுழற்சியை வென்று முதலில் களமிறங்கிய நியூசிலாந்து, 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட் இழப்பிற்கு 145 ஓட்டங்கள் எடுத்தது. 

நியூசிலாந்தின் முன்னணி வீரர்கள் சொற்ப ஓட்டங்களில் ஆட்டமிழந்து வெளியேறினாலும் அதிரடியாக விளையாடிய தலைவர் பிரண்டன் மெக்கல்லம் 59 ஓட்டங்கள் எடுத்து ஸ்கோரை உயர்த்தினார். இதில் 3 பவுண்டரிகளும் 4 சிக்சர்களும் அடங்கும். பாகிஸ்தான் தரப்பில் உமர் குல் 3 விக்கெட்டுகளும் முகம்மது 2 விக்கெட்டுகளும் வீழ்த்தினர். 

பின்னர் 146 ஓட்டங்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய பாகிஸ்தான் அணியின் தொடக்க ஆட்டக்காரர் சர்ஜீல் கான் 12 ஓட்டங்களில் ஆட்டமிழந்தார். பின்னர் ஜோடி சேர்ந்த கம்ரான் அக்மலும் ஹபீசும் அதிரடி ஆட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அணியின் ஓட்ட விகிதம் உயர்ந்தது. 

இந்நிலையில், 52 ஓட்டங்கள் எடுத்திருந்த கம்ரன் அக்மல், காயம் காரணமாக வெளியேறினார். அவரைத் தொடர்ந்து ஹபீசும் 55 ஓட்டங்களில் ஆட்டமிழந்தார். கடைசி ஓவரில் 5 ஓட்டங்கள் தேவைப்பட்டபோது மக்சூத் அணியை வெற்றிப்பாதைக்கு அழைத்து சென்றார். முடிவில் பாகிஸ்தான் 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.