பலே திருடன் சின்னவனுக்கு 4 வருடக் கடூழியச் சிறை

பலே திருடன் சின்னவனுக்கு 4 வருடக் கடூழியச் சிறை

கல்வியங்காட்டைச் சேர்ந்த சின்னவன் என்று அழைக்கப்படும் இரத்தினசிங்கம் சந்திரகுமார் என்றநபரே குற்றவாளியாக இனங்காணப்பட்டு கடூழியச் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது.

 
2001 ஆம் ஆண்டில் சுண்டுக்குளி தேவாலய வீதியில் உள்ள வீடு ஒன்றில் ஓடுபிரித்து உள்ளே இறங்கி டெக், றேடியோ, கமரா, ஓர்கன், வோக்மன், ஒரு சோடி தங்கக்காப்பு, மின் அழுத்தி மற்றும் 11 ஆயிரம் ரூபா பணம் என்பவற்றைத் திருடிய குற்றச்சாட்டில் சின்னவனுக்கு எதிராக வழக்குப் பதிவு செய்யப்பட்டது.
 
அதே ஆண்டு சுண்டுக்குளி சுகாஸ் ஒழுங்கையில் உள்ள வீடொன்றினுள் ஜன்னல் கம்பியை வளைத்து உள்ளே சென்று றேடியோ, கைக்கடிகாரம், அங்கிருந்த அடையாள அட்டை என்பவற்றைத் திருடியதாக சின்னவன் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது. இவற்றில் சில பொருள்கள் சந்தேக நபரது வீட்டிலிருந்து பொலிஸாரால் மீட்கப்பட்டிருந்தன.
 
சந்தேகநபருக்கு இதேபோன்ற பல களவுச் சம்பவங்களுடன் தொடர்புடைய குற்றச்சாட்டில் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டிருந்தது. எனினும் களவைக் கைவிடவில்லை சந்தேகநபர். பல தடவைகள் தடுப்பிலிருந்து தப்பி ஓடியதனால் பிடிவிறாந்தும் பிறப்பிக்கப்பட்டு இருந்தது.
 
இந்த நிலையில் நேற்று சின்னவனுக்கு எதிரான இந்த இரு வழக்குகளிலும் தான் குற்றவாளியென ஒப்புக்கொண்டதையடுத்து தலா 2 வருடங்கள் வீதம் நான்கு வருடங்களுக்கு கடூழியச் சிறைத் தண்டனை விதித்தது யாழ். நீதிமன்று.