நீக்கியதில் வருத்தமில்லை; நானே விலகிவிட இருந்தேன்… நித்யானந்தா

திருவண்ணாமலை: மதுரை இளைய ஆதீனத்தின் பொறுப்பில் இருந்து என்னை அருணகிரிநாதர் நீக்கியதால் எனக்கு எந்த மன வருத்தமும் இல்லை என்று நித்யானந்தா கூறினார்.
நித்தியானந்தா நீக்கப்பட்டதாக மதுரை ஆதீனம் அறிவித்ததைத் தொடர்ந்து, திருவண்ணாமலை திருவண்ணாமலை, கிரிவலப் பாதையில் உள்ள ஆசிரமத்தில் தங்கியிருக்கும் நித்தியானந்தாவிடம் கருத்து கேட்க நிருபர்கள் சென்றனர். ஆனால், அவர் தற்போது செய்தியாளர்களைச் சந்திக்க விரும்பவில்லை என்று அவரது சீடர்கள் தெரிவித்தனர்.
இந் நிலையில் தனது ஆசிரமத்தில் நடந்த நவராத்திரி விழாவில் கலந்து கொண்ட பின்னர் இரவில் திடீரென நிருபர்களை சந்தித்தார் நித்தியானந்தா. அவர் கூறுகையில்,
இந்த நிலையில் திருவண்ணாமலையில் தனது ஆசிரமத்தில் நடந்த நவராத்திரி விழாவில் நித்தியானந்தா கலந்து கொண்டார். பின்னர் அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
மதுரை இளைய ஆதீனப் பொறுப்பில் இருந்து என்னை நீக்கிவிட்டனர் என்ற தகவல் நீங்கள் சொல்லித்தான் எனக்கே தெரியும். இதனால் எனக்கு எந்த மன வருத்தமும் இல்லை. இரண்டொரு நாளில் நானே விலகிவிடலாம் என்று தான் முடிவெடுத்து இருந்தேன்.
இந்த பதவியை நான் கேட்டு பெறவில்லை. மதுரை ஆதீனம், அவராகவே கொடுத்தார். அவருக்கு சங்கடம் ஏற்படும் சூழ்நிலையில் நானே விலகி கொள்வதாக கூறி இருந்தேன். இது ஒரு பொறுப்புதான். இந்த பொறுப்பு தானாக வந்தது. இப்போது போய் விட்டது.
ஆதீனத்தின் மீதான அன்பு, பக்தி, மரியாதை என்றும் எனக்கு உள்ளது. அதே மாதிரி என் மீதான அன்பும், மரியாதையும் ஆதீனத்திடம் உள்ளது என்றார்.
கேள்வி: உங்களது ஆதரவாளர்களால் மதுரை ஆதீனம் தன்னுடைய உயிருக்கு ஆபத்து என்று கூறி உள்ளாரே?
நித்தி: இதுபோன்ற கற்பனையான கேள்விக்கு பதில் கூறமுடியாது. என்ன புகார் கொடுத்திருக்கிறார் என்று எனக்குத் தெரியவில்லை. என்னால் அவருக்கு எந்தவித மன உளைச்சலும், பாதிப்பும் ஏற்படாது என்பது மட்டும் உறுதி.
கேள்வி: உங்கள் நீக்கத்துக்கான காரணம் என்ன?
நித்தி: என்னால் ஏதும் சங்கடம் ஏற்படுமேயானால் நானே விலகி விடுகிறேன் என்று ஏற்கெனவே நான் மதுரை ஆதீனத்திடம் கூறியிருந்தேன். மதுரை ஆதீனம் கையெழுத்து போட்டால் டிஸ்மிஸ், நான் கையெழுத்து போட்டால் ராஜினாமா. இது வெறும் நடைமுறைதான்.
கேள்வி: உங்கள் உடைமைகளை எடுக்க மதுரைக்கு போவீர்களா?
நித்தி: அப்படி ஒரு சூழ்நிலை வராது. மதுரை ஆதீனத்தில் இருந்த என்னுடைய சீடர்கள் திருவண்ணாமலைக்கு வந்து கொண்டுள்ளனர்.
கேள்வி: பதவி நீக்கத்தால் உங்களுக்கு ஏதேனும் பொருளாதார இழப்பு ஏற்பட்டுள்ளதா?
நித்தி: திருஞானசம்பந்தர் மீதும், மதுரை மீனாட்சி அம்மன் மீதும் எனக்கிருந்த பக்தியால் நான் செய்த பணிகளை சிறு, சிறு சேவையாகக் கருதுகிறேன். இதனால் என்னை நீக்கியதால் எனக்கு எந்த பொருளாதார இழப்பும் என்றார்.
கேள்வி: இனி நித்யானந்தா தியான பீடம் எங்கு தலைமையிடமாகக் கொண்டு செயல்படும்?
நித்தி: நான் எனது பயணத்தைத் தொடர்ந்து கொண்டே இருப்பேன். நான் எங்கிருக்கிறேனோ அங்கு தலைமையிடமாகக் கொண்டு நித்யானந்தா தியான பீடம் செயல்படும்.