நிரந்தரத் தீர்வு அவசியம்! ஜெ. - மோடிக்கு கடிதம்

நிரந்தரத் தீர்வு அவசியம்! ஜெ. - மோடிக்கு கடிதம்

தமிழக மீனவர்கள் தொடர்ந்து இலங்கைக் கடற்படையினரால் கைது செய்யப்படுவதைத் தடுக்க நிரந்தரத் தீர்வு அவசியம் என்று தமிழக முதல்வர் ஜெயலலிதா, இந்தியப் பிரதமர் நரேந்திர மோடிக்கு கடிதம் எழுதியுள்ளார். 

அந்தக் கடிதத்தில் அவர் கூறியிருப்பதாவது, 

தமிழக மீனவர்கள் 33 பேரை இலங்கைக் கடற்படையினர் பிடித்துச் சென்றதை கடந்த ஜுன் 1ம் திகதி உங்கள் கவனத்திற்குக் கொண்டு வந்தேன். நீங்கள் உடனடியாகத் தலையிட்டதில் மீனவர்களை விடுவித்தது இலங்கை அரசு இதற்காக உங்களுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். 

ஜூன் மாதம் 3ம் திகதி தங்களை நேரில் சந்தித்து நான் கொடுத்த தீர்மானத்தில் பாக். ஜலசந்திப் பகுதியில் இந்திய மீனவர்களுக்கு உள்ள மரபுரிமையை பாதுகாக்க வேண்டும் என்று கூறியிருந்தேன், மேலும் இலங்கை அரசின் அத்துமீறலினால் மீனவர்களுக்கு பாதுகாப்பு இல்லை என்றும் நான் சுட்டிக்காட்டியிருந்தேன். 

கடந்த 3 ஆண்டுகளில் 77 முறை தமிழக மீனவர்களை இலங்கை கடற்படைக் கைது செய்துள்ளது. 67 முறை மீனவர்கள் மீது தாக்குதல் நடத்தியுள்ளது. இதனால் தமிழக மீனவ சமூகத்தினரிடையே கொந்தளிப்பு ஏற்பட்டுள்ளது. 

நேற்று (ஜூன் 7) 2 தனித்தனி சம்பவங்களில் 82 அப்பாவி மீனவர்களை இலங்கைக் கடற்படைக் கைது செய்ததோடு 18 மீன்பிடிப் படகுகளும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. 

ராமேஸ்வரத்திலிருந்து மீன் பிடிக்கச் சென்ற 50 மீனவர்களையும் அவர்களது 10 விசைப்படகுகளையும் இலங்கைக் கடற்படை பிடித்து வைத்துள்ளது என்று எங்களுக்கு தகவல் வந்துள்ளது. 

மேலும் புதுக்கோட்டை மாவட்ட ஜெகதாப்பட்டிணத்தைச் சேர்ந்த 26 மீனவர்கள் மற்றும் அவர்களது 8 விசைப்படகுகளையும் இலங்கை கடற்படை பிடித்துச் சென்றுள்ளது. 

இதுபோன்று மீண்டும் மீண்டும் இலங்கைக் கடற்படை தமிழக மீனவர்களைத் தொடர்ந்து தாக்கியும், கைது செய்தும் வருகிறது. எனவே இதற்கு நிரந்தரத் தீர்வை உங்கள் தலைமையில் காண வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன். 

இந்த நிரந்தரத் தீர்வுக்கான சில அடிப்படைகளை நான் உங்களுக்கு அளித்த எங்கள் தீர்மானத்தில் குறிப்பிட்டுள்ளேன். அதாவது கச்சத்தீவை உடனடியாக மீட்பது அதில் ஒன்று. இருதரப்பு மீனவர் பேச்சுவார்த்தைகளும் அன்றாடப் பிரச்சினைகளுக்குத் தீர்வு வழங்கும். 

இதில் கூட இலங்கை அரசின் இடையூறு அதிகம் உள்ளது. அதன் காரணமாகவே கொழும்பில் மே மாதம் நடைபெற்ற பேச்சுவார்த்தைகள் தோல்வி அடைந்தது. 

எனவே, தமிழக மீனவர்கள் மீதான் இலங்கைக் கடற்படையினரின் தாக்குதல் மற்றும் மீனவர்களைப் பிடித்துச் செல்லுதல் ஆகியவற்றை நிறுத்த சரியான செயல் திட்டத்தை நிறைவேற்ற வேண்டிய காலம் வந்துவிட்டது. 

இந்திய அரசும், தமிழக அரசும் இந்த விவகாரத்தில் இணைந்து செயல்பட்டால், நிரந்தரத் தீர்வு காண முடியும் என்ற நம்பிக்கை எனக்கு உள்ளது. 

உடனடியாக இலங்கைக் கடற்படையினரின் செயல்பாடுகளை இந்திய அரசு கண்டிக்கவேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன். 

82 மீனவர்களையும் உடனடியாக விடுவிக்க இலங்கை அரசை வலியுறுத்த வேண்டும் என்று தங்களைக் கேட்டுக் கொள்கிறேன். 

இவ்வாறு தன் கடிதத்தில் வலியுறுத்தியுள்ளார் முதல்வர் ஜெயலலிதா என தி ஹிந்து செய்தி வௌியிட்டுள்ளது.