நியாயமான விலையில் பொருள் விற்பனையில் ஈடுபடாத ப.கூ.முகாமையாளர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்க முடிவு

உலக உணவுத் திட்டத்தின் கீழ், விநியோகிக்கப்படும் உணவுப் பொருட்களை நியாயமான விலையில் பயனாளிகளுக்கு விற்பனை செய்யத் தவறும் பலநோக்கு கூட்டுறவு முகாமையாளர்களின் மீது சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படுமென யாழ். மாவட்ட கூட்டுறவு அபிவிருத்தி உதவி ஆணையாளர் கே.அருந்தவநாதன் தெரிவித்தார்.

யாழ். மாவட்ட பலநோக்கு கூட்டுறவு சங்கங்களின் பொது முகாமையாளர்களுக்கான அவசர கலந்துரையாடல் ஒன்று இன்று பிற்பகல் யாழ். வீரசிங்கம் மண்டபத்தில் நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

புதிய ஒழுங்கமைப்பின் ஊடாக பலநோக்கு கூட்டுறவுச் சங்கங்கள் பரீட்சார்த்தமாக மேற்கொள்ளப்படும் விநியோக நடைமுறைகளில் வெற்றி பெற்றுள்ளமையினால் ஏனைய பலநோக்கு கூட்டுறவு சங்கங்கள் இச்செயற்பாட்டினை மேற்கொள்வதற்கான நடைமுறைகள் தீர்மானிக்கப்பட்டுள்ளன.

இதற்கு பல மில்லியன் ரூபா நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதால் அந்த நிதியினை சரியான முறையில் பயன்படுத்தி பயன்பெறுமாறும் யாழ். மாவட்ட கூட்டுறவு அபிவிருத்தி உதவி ஆணையாளர் மேலும் தெரிவித்தார்.