நித்தி நீக்கம்! எல்லாம் அவன் செயல்

மதுரை ஆதீன மடத்தின் இளைய ஆதீனம் பொறுப்பில் இருந்து நித்யானந்தா நீக்கப்பட்டுள்ளார்.

1500 ஆண்டுகள் பழமையானது மதுரை ஆதீன மடம். இம்மடம் திருஞான சம்பந்தரால் ஏற்படுத்தப்பட்டது. மடத்தின் 292-வது குருமகா சன்னிதானமாக ஸ்ரீலஸ்ரீ அருணகிரிநாத ஞானசம்பந்த தேசிக பரமாச்சார்ய சுவாமிகள் இருந்து வருகிறார். இம் மடத்தின்கீழ் தஞ்சை மாவட்டம் கஞ்சனூர் அருள்மிகு அக்னீஸ்வர சுவாமி திருக்கோவில், திருப்புறம்பியம் அருள்மிகு காசிநாத சுவாமி திருக்கோவில், கச்சனம் கைசின்னேஸ்வர சுவாமி திருக்கோவில், பண்ணத்தெரு பண்ணகா பரமேஸ்வர சுவாமி திருக்கோவில் உள்ளிட்ட கோவில்கள் உள்ளன.

இந்நிலையில் கர்நாடக மாநிலம் பிடதி ஆசிரம நிறுவனர் நித்யானந்தரை, இளைய சன்னிதானமாக கடந்த ஏப்ரல் 23-ம் தேதி அருணகிரி நாதர் நியமித்தார். நித்யானந்தர் மீது ஏற்கெனவே பல சர்ச்சைகள் இருந்ததால் அவரை இளைய சன்னிதானமாக நியமனம் செய்ததற்கு பெரும் எதிர்ப்புக் கிளம்பியது. ஆதீன மீட்புக் குழு என்ற அமைப்பு உருவாக்கப்பட்டு பல்வேறு போராட்டங்கள் நடத்தப்பட்டன.

காஞ்சி மடம் மற்றும் திருவாவடுதுறை ஆதீன மடம் உள்ளிட்ட அனைத்து சைவ மடங்களும் நித்யானந்தரின் நியமனத்தை எதிர்த்தன. ஆனாலும், நித்யானந்தரை நீக்கம் செய்ய முடியாது என்று மதுரை ஆதீனம் அறிவித்தார்.

மீட்புக் குழுவினர் பல்வேறு போராட்டங்களை நடத்தி வந்த நிலையில், நீதிமன்றத்திலும் வழக்குத் தொடரப்பட்டது. ஆதீன மடம் சார்பிலும் மீட்புக் குழுவினர் மீது வழக்குத் தொடரப்பட்டன. ஆதீன மடத்தில் நித்யானந்தரின் சீடர்கள் விதிகளை மீறிச் செயல்படுவதாகவும் குற்றச்சாட்டு எழுந்தது. நடிகை ரஞ்சிதா உள்ளிட்டோர் நித்யானந்தருடன் ஆதீன மடத்துக்கு வருவதற்கு எதிர்ப்புக் கிளம்பியது.

மதுரை அருள்மிகு மீனாட்சியம்மன் கோவிலை மீட்கப் போவதாக, நித்யானந்தர் அறிவித்ததையும் மதுரை பகுதி மக்கள் கடுமையாக எதிர்த்தனர். பலத்த எதிர்ப்புகள் வந்தபோதும், நித்யானந்தரை நீக்க முடியாது என மதுரை ஆதீனம் தொடர்ந்து அறிவித்து வந்தார்.

இந்நிலையில், மதுரை ஆதீனத்தின் சொத்துகள் இந்து சமய அறநிலையத் துறையின் சட்ட விதிகளை மீறிப் பயன்படுத்தப்படுவதாகவும், அங்கு புலித்தோல் உள்ளிட்டவை இருப்பதாகவும் வழக்குத் தொடரப்பட்டது. இவ்வழக்கில் நீதிமன்றம் உத்தரவின்படி, மதுரை மாநகரக் காவல் துணை ஆணையர் ஆர்.திருநாவுக்கரசு ஆலோசனையின்பேரில் விளக்குத்தூண் ஆய்வாளர் கதிர்வேல் தலைமையிலான போலீஸார் கடந்த 3 மாதங்களுக்கு முன்பு ஆதீன மடத்தில் சோதனையிட்டனர். இச்சோதனையில் பல்வேறு ஆவணங்கள் கைப்பற்றப்பட்டன.

இதன் அடிப்படையில் நீதிமன்றத்துக்கும், தமிழக அரசுக்கும் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. இதைத்தொடர்ந்து மதுரை ஆதீனம் மீதான உயர்நீதிமன்ற வழக்கில், அரசுத் தரப்பில் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. அதில் நித்யானந்தரின் நியமனம் செல்லாது என்றும், ஆதீன சொத்துகள் முறைகேடாக பயன்படுத்தப்படுவதாகவும் குறிப்பிடப்பட்டிருந்தது.

இதற்கிடையே ஆதீன மடத்தை அரசே ஏற்கப் போவதாக தகவல்கள் பரவின. இந்த நிலையில், மதுரை பத்திரிகையாளர்கள் சிலரை வியாழக்கிழமை தொடர்பு கொண்ட மதுரை ஆதீனம், "ஆதீனத்தின் இக்கட்டான சூழலைக் கருத்தில் கொண்டு நித்யானந்தா இளைய சன்னிதானம் பதவியில் இருந்து விலக உள்ளதாகவும், அதை அவரே அறிவிப்பார்´ என்றும் தெரிவித்தார்.

இதுதொடர்பாக திருவண்ணாமலையில் இருந்த நித்யானந்தரை செய்தியாளர்கள் தொடர்பு கொள்ள முயன்றனர். ஆனால், செய்தியாளர்களிடம் பேசிய அவரது சீடர், அந்த தகவல் உண்மையல்ல என்று குறிப்பிட்டார்.

இந்நிலையில், மதுரை மாநகரக் காவல் ஆணையருக்கு மதுரை ஆதீனம் அருணகிரிநாதர் தனது வழக்குரைஞர் மூலமாக வெள்ளிக்கிழமை அளித்துள்ள கடிதத்தில், "மதுரை ஆதீனத்தின் வாரிசாக என்னால் நியமிக்கப்பட்ட பெங்களூர் பிடதி ஆசிரம நிறுவனர் ஸ்ரீநித்யானந்தாவை, 19.10.2012-ல் வாரிசு பொறுப்பில் இருந்து நீக்கி உத்தரவிடுகின்றோம். மதுரை ஆதீனத்தின் நலன் கருதி, யாருடைய தூண்டுதலோ வற்புறுத்தலோ இன்றி இந்த உத்தரவை பிறப்பிக்கின்றோம்´ என்று குறிப்பிட்டுள்ளார். மேலும், இப்புகாரை உடனடியாக ஏற்று நித்யானந்தரின் நபர்களை மடத்தில் இருந்து வெளியேற்றியும், நித்யானந்தர் மூலம் எனக்கு எந்தவிதமான கேடும் விளைவித்திடாமல் எனது உயிருக்கும், உடமைக்கும் பாதுகாப்பு வழங்குமாறும் கேட்டுக் கொண்டுள்ளார். மேலும், நித்யானந்தர் நீக்கம் குறித்து பொது அறிவிப்பையும் மதுரை ஆதீனம் அருணகிரிநாதர் வெளியிட்டுள்ளார்.

மதுரை, அக். 19: மதுரை ஆதீன மடத்தில் இருந்து நித்யானந்தாவை நீக்கியது குறித்து வெள்ளிக்கிழமை இரவு செய்தியாளர்களிடம் மதுரை ஆதீனம் அருணகிரிநாதர் கூறியது:

கடந்த ஏப்ரலில் இளைய ஆதீனமாக நித்யானந்தாவை நியமித்தோம். அவரை தற்போது அப்பதவியில் இருந்து நீக்கியுள்ளோம். சைவ மெய்யன்பர்களின் வேண்டுகோளுக்கு இணங்கியும், தமிழக அரசு, நீதிமன்றத்தின் விருப்பத்துக்கு இணங்கவும் அவரை பதவியில் இருந்து நீக்கம் செய்துள்ளோம். இது இறைவனின் செயலே.

நீக்கப்பட்டது குறித்து, நித்யானந்தாவிடம் தெரிவிக்க, அவரது தொலைபேசியில் தொடர்பு கொண்டோம். ஆனால், தொடர்பு கொள்ள முடியவில்லை. நித்யானந்தா எனது சீடராக இருந்துள்ளார். ஆகவே, என்னை மிரட்டமாட்டார். அவராக பதவியை ராஜிநாமா செய்ய இருந்தார். ஆனால், வழக்கு நிலுவையில் இருப்பதால் ராஜிநாமா செய்ய வேண்டாம் என அவரது வழக்குரைஞர்கள் ஆலோசனை கூறியதால், அந்த முடிவை எடுக்கவில்லை. நேரம் வரும்போது, தமிழக முதல்வரை சந்திப்பேன். நித்யானந்தாவின் நீக்கம் இறைவனின் சித்தபடி நடந்துள்ளதால், இது நிரந்தரமானது. வேறுவழியில்லாத நிலையில் அவரை இளைய ஆதீனமாக நியமித்தோம். இப்போதைய சூழ்நிலை காரணமாக அவரை நீக்கியுள்ளோம். ஆதீனத்தின் கதவுகள் எப்போதும் போல திறந்திருக்கும். அனைத்து பூஜைகளும் நடைபெறும் என்றார்.