நாவாந்துறையில் மோதல்; எண்மரில் ஐவருக்கு மறியல்

நாவாந்துறையில் மோதல்; எண்மரில் ஐவருக்கு மறியல்

நாவாந்துறை குழு மோதல் சம்பவத்துடன் தொடர்புடையவர்கள் என சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்ட 8 பேரில் மூவரை பிணையில் செல்ல நீதிமன்றம் அனுமதி வழங்கியதுடன் ஐவரை நாளை வரை விளக்கமறியலில் வைக்குமாறும் உத்தரவிட்டுள்ளது. 

நாவாந்துறைப்பகுதியில் உள்ள சென்.மேரிஸ் மற்றும் சென். நீக்கிலஸ் அணியினருக்கு இடையில் மைலோக் கிண்ணப் போட்டி சில தினங்களுக்கு முன்னர் நடைபெற்று சென்.மேரிஸ் அணி வெற்றியீட்டியது.    

இதனையடுத்து இடம்பெற்ற குழு மோதலின் பின்னணியில் நேற்றைய தினம் எண்மர் யாழ். பொலிஸாரினால் கைது செய்யப்பட்டனர். 

  அத்துடன் நேற்று இடம்பெற்ற சம்பவத்தில் வைத்தீஸ்வரா சந்தியில் வைத்து தன்னைத் தாக்கினர் என சென்.மேரிஸ் அணியைச் சேர்ந்த ஒருவர் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாட்டினைப் பதிவு செய்துள்ளார்.   

அதனையடுத்து சென் நீக்கிலஸ் அணியைச் சேர்ந்த ஐவர் கைது செய்யப்பட்டதுடன் பொலிஸாரைத் தாக்க முயன்றனர் என்ற குற்றச்சாட்டில் சென். மேரிஸ் அணியைச் சேர்ந்த மூவரும் கைதாகினர்.    

குறித்த எண்மரும் இன்றைய தினம்  யாழ்ப்பாணம் நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தப்பட்டனர். இவர்களை விசாரணை செய்த நீதவான் பொலிஸாரைத் தாக்க முயன்றனர் என்ற சந்தேகத்தில்  கைது செய்யப்பட்ட மூவரையும் பிணையில் விடுதலை செய்ததுடன் டிசம்பர் 09 ஆம் திகதி மறு தவணையும் அறிவிக்கப்பட்டுள்ளது.   

அதேவேளை, தாக்குதல் சம்பவம் தொடர்பில் முறைப்பாடு செய்யப்பட்டவர்களில் கைதாகிய ஐவரையும் நாளை வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான்  உத்தரவிட்டுள்ளார்.   

இதேவேளை, குறித்த இரு அணிகள்  சார்ந்தவர்களும் இதுவரை சமாதானம் ஆகவில்லை. அத்துடன் கைதானவர்களை விடுதலை செய்யுமாறு இன்று காலை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா பொலிஸ் அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தையும் நடத்தியிருந்தார்.   

எனினும் நீதிமன்ற உத்தரவிற்கு அமையவே கைதானவர்கள் விடுதலை செய்யப்படுவர் என்றும் இரு அணிகளும் சமாதானத்திற்கு இணங்க வேண்டும் என்றும் அமைச்சரிடம் பொலிஸார் கூறியிருந்ததாக பொலிஸ் நிலைய தகவல்கள் தெரிவிக்கின்றன.