நாவாந்துறையில் மீண்டும் மோதல் : பொலிஸார் மீது தாக்குதல்

நாவாந்துறையில் மீண்டும் மோதல் : பொலிஸார் மீது தாக்குதல்

நாவாந்துறை குழு மோதல் சம்பவத்துடன் தொடர்புடைய நால்வர் இன்று யாழ்ப்பாணம் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளனர்.     

நேற்று முன்தினம் இடம்பெற்ற மைலோ கிண்ண தொடரில் வெற்றியீட்டிய சென் .மேரிஸ் அணியினருக்கும் சென்.நீக்கிலஸ் அணியினருக்கும் இடையில் நேற்று முன்தினம் முதல் மோதல்கள் இடம்பெற்று வருகின்றது. 

இதனால் நாவாந்துறைப்பகுதி பதற்ற நிலையிலேயே உள்ளது.    

இதனடிப்படையில் பொலிஸ் மற்றும் இராணுவ பாதுகாப்பு தொடர்ந்தும் போடப்பட்டுள்ளது. இந்த நிலையில் இன்று காலை வைத்தியசாலைக்கு சென்று கொண்டிருந்த சென்.மேரிஸ் அணியைச் சேர்ந்த ஒருவரை 10 பேர் கொண்ட குழுவினர் வைத்தீஸ்வரா சந்திப்பகுதியில் வைத்து அடித்துக் காயப்படுத்திவிட்டு அவரது துவிச்சக்கர வண்டியையும் பறித்துச் சென்றுள்ளனர்.   

அதனையடுத்து விடயம் அறிந்த சென்.மேரிஸ் அணி சார்பானவர்கள் எதிரணி சென்.நீக்கிலஸ்அணியினர் பக்கம் கோபத்துடன் கற்கள் மற்றும் போத்தல்களை வீசிய வண்ணம் சென்று கொண்டிருந்தனர். அதன்போது பொலிஸார் ஒருவரும் கல்வீச்சுக்கு இலக்காகியுள்ளார்.   

எனினும் இரு அணியினரையும் சமாதானமாக கொண்டு செல்ல வேண்டும் என்ற முனைப்பில் சென்.நீக்கிலஸ் அணியினரைச் சந்தித்து யாழ்ப்பாணம் பிரதேச செயலகர் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டமையால் மோதல் வெடிக்கவில்லை.   

எனினும் அந்தப் பகுதியில் தொடர்ந்து பதற்றம் நிலவுவதால் நாவாந்துறை சந்தி மற்றும் அதனை அண்டிய பகுதிகளில் இராணுவம் மற்றும் பொலிஸார் குவிக்கப்பட்டதுடன் பதற்ற சூழலும் ஏற்பட்டிருந்தது.    

இதேவேளை  வைத்தீஸ்வரா பகுதியில் தன்னைத் தாக்கினர் என்று பொலிஸாரிடம் பெயர் குறிப்பிடப்பட்டவர்களில் சென்.நீக்கிலஸ் அணியைச் சார்ந்த நால்வர் யாழ். பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளனர்.   

இருப்பினும் இரண்டு அணிகளையும் சமாதானப்படுத்துவதில் பிரதேச செயலர் மற்றும் கிராம சேவையாளர் மற்றும் பொலிஸாரும் மும்முரமாக உள்ளனர். 

இன்றைய தினமே சென். மேரிஸ் அணியுடனும் பேசவுள்ளதாகவும் அவ்வாறு இரண்டு அணிகளும் சமாதானமாகினால் மட்டுமே கைது செய்யப்பட்டவர்கள் விடுதலை செய்யப்படுவர் என்றும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.   

இது குறித்து அங்கிருந்தவர்கள் தெரிவித்ததாவது,  இரண்டு அணிகளிலும் பிழைகள் உண்டு. இவ்வாறான மோதல்கள் இன்று நேற்றல்ல பல ஆண்டுகளாக நடைபெற்று வருகின்றது. 

இவர்கள் இன்று மோதுவார்கள் பின்னர் சேர்ந்து விடுவார்கள் என்றும் அவர்கள்  மேலும் தெரிவித்தனர்.   

எனினும் குறித்த பகுதியில் தொடர்ந்தும் பொலிஸார் பாதுகாப்பு கடமையில் நிறுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.