நான் ஏன் நித்தியானந்தாவை நீக்கினேன் தெரியுமா.. ஆதீனம் சொல்வதைக் கேளுங்க!

மதுரை ஆதீன மடத்தின் பெருமையை நிலைநாட்டத்தான் நித்தியானந்தாவை இளைய ஆதீனம் பொறுப்பிலிருந்து நீக்கினேன் என்று மதுரை ஆதீன மடாதிபதி அருணகிரிநாதர் கூறியுள்ளார்.

தேங்காய் உடைத்து சிறப்புக் கொண்டாட்டம்

நித்தியானந்தாவை தூக்கியதைத் தொடர்ந்து மதுரை ஆதீன பக்தர்கள் குஷியடைந்துள்ளனர். நேற்று மடம் முன்பு குவிந்த அவர்கள் தேங்காய் உடைத்துக் கொண்டாடினர். அருணகிரிநாதரும் சிறப்புப் பூஜைகளைச் செய்தார். அதில் ஏராளமானோர் கலந்து கொண்டனர். பின்னர் பக்தர்களிடையே அவர் பேசினார்.

நம்பி, நியமித்தேனே…!

திருஞானசம்பந்தர் தோற்றுவித்த ஆதீன மடம் 1,500 ஆண்டுகளாக போற்றி காக்கப்பட்டு வருகிறது. ஆதீனத்திற்கு பல ஆயிரம் கோடி சொத்துகள் இருப்பதால், அதை நிர்வாகம் செய்ய நித்தியானந்தா சரியானவராக இருப்பார் என்று நினைத்து அவரை நியமித்தேன்.

இந்த விவகாரத்தில் அவரது பேச்சைக் கேட்கவில்லை

நான் எப்போதும் தருமபுரம் ஆதீனம் ஆலோசனைகளை பெறுவது வழக்கம். இந்த விவகாரத்தில் அவரது பேச்சை கேட்கவில்லை. இதனால் அவர்களும், இந்து அமைப்பினரும் எதிர்த்தனர்.

நித்தியானந்தா மரபை மீறி விட்டார்

ஆதீன மரபுப்படி நித்தியானந்தா நடந்து கொள்ளவில்லை. என் பேச்சை மீறி செயல்பட்டார். ஆதீனத்தின் பழம் பெருமைக்கு என்னால் எந்த களங்கமும் ஏற்பட்டு விட்டு விடக்கூடாது என்பதற்காகவும், மடத்தின் பெருமையை நிலைநாட்டவும் நித்தியானந்தாவை நீக்கினேன்.

தாரை தாரையாக கொட்டிய கண்ணீர்!

மதுரை ஆதீனம் பக்தர்கள் மத்தியில் பேசுகையில், நித்தியானந்தாவைப் பற்றிச் சொல்லும்போது அவரது கண்களிலிருந்து கண்ணீர் கொட்டியது. அதைப் பார்த்து பக்தர்களும் கலங்கினர். பிறகு செய்தியாளர்களிடமும் பேசினார் மதுரை ஆதீனம்.

இதுவும் இறைவன் செயல்தான்!

பழமை வாய்ந்த ஆதீன மடத்தின் நெறிகளையும், சொத்துகளையும் காக்க கடந்த ஏப்ரல் மாதம் நித்தியானந்தாவை இளைய ஆதீனமாக நியமித்தோம். தற்போது அந்த பதவியில் இருந்து அவரை நீக்கியுள்ளோம். இதுவும் இறைவனின் செயல் தான்.

பட்ட கஷ்டமெல்லாம் போச்சு

நித்தியானந்தா நீக்கப்பட்டதால், கடந்த சில மாதங்களாக நான்பட்ட மனக்கஷ்டத்தில் இருந்து விடுதலை பெற்றுள்ளேன். இப்போது சுதந்திரமாக உள்ளேன்.

கதவுகள் எப்போதும் திறந்திருக்கும்

மதுரை ஆதீனத்தின் கதவுகள் எப்போதும் போல் திறந்திருக்கும். வழக்கம் போல் அனைத்து பூஜைகளும் நடைபெறும். எந்த நேரமும் பக்தர்கள் வழிபாடு செய்யலாம்.

இதுக்கெல்லாமா நேரம் பார்ப்பார்கள்?

நித்தியானந்தாவை ராஜினாமா செய்யுமாறு நான் கூறியபோது நல்ல நாள் பார்த்து ராஜினாமா செய்வதாக கூறினார். நல்ல காரியங்களுக்குத்தான் நல்ல நேரம், நட்சத்திரம் எல்லாம் பார்க்க வேண்டும். ராஜினாமா செய்வதற்கு எதற்கு நல்ல நாள் பார்க்க வேண்டுமா?

பொய்ப்புழுகி நித்தியானந்தா!

ஆதீன வளர்ச்சிக்கு ரூ.100 கோடி கொடுப்பதாகவும், முதல் தவணையாக ரூ.5 கோடி தருவதாகவும் நித்தியானந்தா கூறினார். ஆனால் ஒரு பைசா கூட கொடுக்கவில்லை. அவர் சொன்னதெல்லாம் முழுப்பொய் என்றார் ஆதீனம்.