நடு வீதியில் நிர்வாணமாக ஓடி வந்த இளம்பெண்ணால் பரபரப்பு

மதுரை சோழவந்தான் அருகே அக்ஷயா மனநலக் காப்பகத்தில் இருந்து, நிர்வாணமாக ஓடி வந்த இளம்பெண், பொலிசில் தான் பலாத்காரத்திற்கு உட்படுத்தப்பட்டதாக புகார் தெரிவித்தார். அவருக்கு ஆதரவாக மக்கள் மறியலில் ஈடுபட்டனர். 

மதுரை புல்லுாத்தில் ´அக்ஷயா மனநலக் காப்பகம்´ உள்ளது. இதன் நிர்வாக மேலாளர் எல்.கிருஷ்ணன். இங்கு மனநலம் பாதிக்கப்பட்ட 174 பேர் உள்ளனர். நேற்று மதியம் 2 மணிக்கு காப்பகத்தில் இருந்து 23 வயது பெண் ஒருவர் நிர்வாணமாக ஓடிவந்தார். நுாறு நாள் வேலையில் ஈடுபட்ட பெண்கள், அப்பெண்ணுக்கு உடைகளை கொடுத்தனர். 

அப்பெண் கூறியதாவது: நான் ஈரோட்டை சேர்ந்தவள். ஆறு மாதங்களுக்கு முன் என்னையும் மற்ற 11 பேரையும் காப்பக ஊழியர்கள் அழைத்து வந்தனர். எங்களை பாலியல் தொந்தரவு செய்கின்றனர். ஐந்து மாதங்களுக்கு முன் என்னை சிலர் பலாத்காரத்திற்கு உட்படுத்தினர். என்னை நிர்வாணப்படுத்தி கற்பழிக்க முயற்சி நடந்தது, என்றார். 

அப்பெண்ணிற்கு ஆதரவாக கொடிமங்கலம் மக்கள் மேலக்கால் ரோட்டில் நேற்றிரவு மறியலில் ஈடுபட்டனர். டி.எஸ்.பி., காந்தசொரூபன், இன்ஸ்பெக்டர் கணேசன் பேச்சுவார்த்தை நடத்தினர். பின் மறியல் கைவிடப்பட்டது. 

காப்பக கிளார்க் திவ்யா, 30, துப்புரவு ஊழியர் சரஸ்வதி, 40, ஊழியர்கள் சரவணன், 25, விஷால், 20, ஆதீஷ், 25 உட்பட ஆறு பேரை விசாரணைக்காக நாகமலை பொலிசார் அழைத்து சென்றனர். நிர்வாக மேலாளர் கிருஷ்ணனை விசாரணைக்கு ஆஜராகும்படி தகவல் அனுப்பியுள்ளனர். 

மாவட்ட சமூக நல அலுவலர் கலைச்செல்வி உத்தரவுப்படி, மகளிர் காப்பகத்தில் அப்பெண் தங்க வைக்கப்பட்டார்.காப்பக கிளார்க் திவ்யா கூறுகையில், ´´இங்கு 174 மனநலம் பாதிக்கப்பட்டோர் பராமரிக்கப்படுகின்றனர். இங்கு வருவோருக்கு மொட்டை அடித்து சீருடை வழங்கப்படும். 

பாடங்கள், செயல்வழி கற்றல் முறையில் மனநலத்திற்கானசிகிச்சை அளிக்கப்படுகிறது. இங்குள்ள 174 பேரும் மனநலம் பாதிக்கப்பட்டவர்கள் தான். ஆடையின்றி இளம்பெண் ரோட்டிற்கு எப்படி வந்தார் என தெரியவில்லை,´´ என்றார்.