தோனி பற்றிய செய்திகளை ஒளிபரப்ப 2 வாரங்களுக்கு தடை

தோனி பற்றிய செய்திகளை ஒளிபரப்ப 2 வாரங்களுக்கு தடை

கிரிக்கெட் வீரர் மகேந்திரசிங் தோனி தொடர்பான செய்திகளை ஒளிபரப்ப, தனியார் தொலைக்காட்சிகளுக்கு இரண்டு வாரம் இடைக்காலத் தடை விதித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 

இது தொடர்பாக, இந்தியக் கிரிக்கெட் அணியின் தலைவர் எம்.எஸ்.தோனி உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனு விவரம்: ஐபிஎல் கிரிக்கெட் போட்டியின் போது நான் சூதாட்டத்தில் ஈடுபட்டதாக தவறான செய்திகளை உத்தரப்பிரதேசம் மற்றும் தமிழகத்தில் உள்ள ஜீ மீடியா நிறுவனம் கடந்த மாதம் 11-ஆம் தேதி முதல் செய்தி ஒளிபரப்பி வருகிறது. 

ஐபிஎல் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் தலைவராக செயல்பட்டேன். அப்போது, சூதாட்டம், மேட்ச் பிக்ஸிங் போன்ற சட்டவிரோதமான செயல்களில் ஈடுபட்டதாக ஜீ நிறுவனம் அதன் 24 மணி நேர ஹிந்தி செய்திச் சேனலில் செய்தி ஒளிபரப்புகிறது. இதன் மூலம் தமிழகம் உள்பட இந்தியா மற்றும் வெளிநாடுகளில் உள்ள ரசிகர்கள் மத்தியில் என்னை தவறாக சித்திரிக்கின்றனர். என்னைப் பற்றி அவதூறான மற்றும் தவறான தகவல்களை தொடர்ந்து ஒளிபரப்புகின்றனர். 

ஐபிஎல் சூதாட்டம் தொடர்பாக ஆய்வு செய்து அறிக்கை தாக்கல் செய்ய ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையில், கடந்த ஆண்டு ஜூலை மாதம் 30-ஆம் திகதி 3 பேர் கொண்ட குழுவை உச்ச நீதிமன்றம் நியமித்தது. 

அந்தக் குழு சூதாட்டம் தொடர்பாக விசாரணை செய்து கடந்த மாதம் 10-ஆம் திகதி உச்சநீதிமன்றத்தில் அறிக்கைத் தாக்கல் செய்தது. அது தொடர்பான வழக்கு இரண்டு முறை விசாரணைக்கு வந்தது. அப்போது எந்த ஒரு உத்தரவும் பிறப்பிக்காமல் மார்ச் 25-ஆம் திகதிக்கு வழக்கு ஒத்தி வைக்கப்பட்டது. 

அந்தக் குழு தாக்கல் செய்த விசாரணை அறிக்கையில், நான் சூதாட்டத்தில் ஈடுபட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது என அந்தத் தொலைக்காட்சியில் செய்தி ஒளிபரப்பப்பட்டு வருகிறது. இதன் மூலம் எனது பெயர், புகழ் மற்றும் பொதுமக்களிடையே உள்ள என் மீதான மதிப்பு உள்பட அனைத்தும் பாதிக்கப்பட்டுள்ளன. 

எனவே, ஜீ செய்தி தொலைக்காட்சி நிறுவனம் மற்றும் நியூஸ் நேஷன் நெட்வொர்க் ஆகிய இரண்டு நிறுவனங்களும் எனது தொடர்பான எந்த ஒரு செய்தியையும் வெளியிடுவதற்குத் தடை விதிக்க வேண்டும். மேலும், நஷ்டஈடாக ரூ. 100 கோடி வழங்கவும் அந்த நிறுவனங்களுக்கு உத்தரவிட வேண்டும் என மனுவில் கோரப்பட்டுள்ளது. இந்த மனு நீதிபதி எஸ்.தமிழ்வாணன் முன்பு செவ்வாய்க்கிழமை (மார்ச் 18) விசாரணைக்கு வந்தது. மனுவை விசாரித்த நீதிபதி, தோனி தொடர்பான செய்திகளை ஒளிபரப்புவதற்கு அந்த நிறுவனங்களுக்கு இரண்டு வாரம் இடைக்காலத் தடை விதித்தார். மேலும், இது தெடர்பாக பதில் அளிக்க அவர்களுக்கு நோட்டீஸ் அனுப்பவும் நீதிபதி உத்தரவிட்டார்.