தென்னாபிரிக்க அணியை வெற்றிகொண்டும் அரையிறுதி வாய்ப்பை இழந்தது இந்தியா

சர்வதேசக் கிரிக்கெட் சபையின் உலக டுவென்டி டுவென்டி தொடரின் இன்றைய இரண்டாவது போட்டியில் இந்திய அணி வெற்றிபெற்றுள்ளது. தென்னாபிரிக்க, இந்திய அணிகளுக்கிடையிலான இப்போட்டியில் இந்திய அணி ஓர் ஓட்டத்தால் வெற்றிபெற்றது.

கொழும்பு ஆர்.பிரேமதாச மைதானத்தில் இடம்பெற்ற இப்போட்டியில் நாணயச்சுழற்சியில் வெற்றிபெற்ற தென்னாபிரிக்க அணி முதலில் களத்தடுப்பில் ஈடுபடத் தீர்மானித்தது.

இதன்படி முதலில் துடுப்பெடுத்தாடிய இந்திய அணி 20 ஓவர்களில் 6 விக்கெட்டுக்களை இழந்து 152 ஓட்டங்களைப் பெற்றது. ஒரு கட்டத்தில் 3 விக்கெட்டுக்களை இழந்து 36 ஓட்டங்களைப் பெற்றிருந்த இந்திய அணி அதன் பின்னர் சிறிய இணைப்பாட்டத்தைப் பகிர்ந்த போதிலும், ஒரு கட்டத்தில் 16 ஓவர்களில் 5 விக்கெட்டுக்களை இழந்து 112 ஓட்டங்களைப் பெற்றுத் தடுமாறியது. எனினும் அதன் பின்னர் இணை சேர்ந்த சுரேஷ் ரெய்னா, மகேந்திரசிங் டோணி இருவரும் சிறப்பாக ஓட்டங்களைக் குவித்தனர்.

துடுப்பாட்டத்தில் இந்திய அணி சார்பாக சுரேஷ் ரெய்னா 34 பந்துகளில் 45 ஓட்டங்களையும், ரோகித் சர்மா 27 பந்துகளில் 25 ஓட்டங்களையும், மகேந்திரசிங் டோணி 13 பந்துகளில் ஆட்டமிழக்காமல் 23 ஓட்டங்களையும், யுவ்ராஜ் சிங் 15 பந்துகளில் 21 ஓட்டங்களையும் பெற்றனர்.

பந்துவீச்சில் தென்னாபிரிக்க அணி சார்பாக ரொபின் பீற்றர்சன் 4 ஓவர்களில் 25 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்டுக்களையும், மோர்னி மோர்க்கல் 4 ஓவர்களில் 28 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்டுக்களையும், ஜக்ஸ் கலிஸ் ஒரு விக்கெட்டையும் கைப்பற்றினர்.

153 ஓட்டங்களை வெற்றி இலக்காகக் கொண்டு துடுப்பெடுத்தாடிய தென்னாபிரிக்க அணி 19.5 ஓவர்களில் சகல விக்கெட்டுக்களையும் இழந்து 151 ஓட்டங்களைப் பெற்று ஓர் ஓட்டத்தால் தோல்வியடைந்தது.

ஆரம்பத்தில் விக்கெட்டுக்களை இழந்த தென்னாபிரிக்க அணி 16 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்டுக்களை இழந்திருந்தது. அதன் பின்னர் இணைப்பாட்டங்கள் புரியப்பட்டு அவ்வணி ஒரு கட்டத்தில் 3 விக்கெட்டுக்களை இழந்து 95 ஓட்டங்களுடன் காணப்பட்ட போதிலும், விக்கெட்டுக்கள் தொடர்ந்து வீழ்த்தப்பட அவ்வணியின் வெற்றி கேள்விக்குள்ளானது. ஆனால் இறுதிநேரத்தில் கடைநிலை வீரர்கள் சிறப்பாக ஆட தென்னாபிரிக்க அணி இறுதி 6 பந்துகளில் 14 ஓட்டங்கள் தேவைப்பட்டன. முதலாவது பந்தில் அல்பி மோர்க்கல் ஆறு ஓட்டமொன்றைப் பெற்ற போதிலும் அடுத்த பந்தில் அவர் ஆட்டமிழந்தார். இறுதி 3 பந்துகளில் 8 ஓட்டங்கள் தேவைப்பட மோர்னி மோர்க்கல் 4ஆவது பந்தில் ஆறு ஓட்டமொன்றைப் பெற்றார். ஆனால் அடுத்த பந்தில் அவர் ஆட்டமிழக்க இந்திய அணி வெற்றிபெற்றது.

துடுப்பாட்டத்தில் தென்னாபிரிக்க அணி சார்பாக பஃப் டு பிளெஸிஸ் 38 பந்துகளில் 65 ஓட்டங்களைப் பெற்றார். அவரைத் தவிர வேறு எந்த வீரரும் 20 ஓட்டங்களுக்கு மேல் பெற்றிருக்கவில்லை.

பந்துவீச்சில் இந்திய அணி சார்பாக ஷகீர் கான் 4 ஓவர்களில் 22 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்டுக்களையும், லக்‌ஷ்மிபதி பாலாஜி 3.5 ஓவர்களில் 37 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்டுக்களையும், யுவ்ராஜ் சிங் 4 ஓவர்களில் 23 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்டுக்களையும், இர்பான் பதான், ரவிச்சந்திரன் அஷ்வின் ஆகியோர் தலா ஒரு விக்கெட்டையும் கைப்பற்றினர்.

போட்டியின் நாயகனாக இந்திய அணியின் யுவ்ராஜ் சிங் தெரிவானார்.

இப்போட்டியில் தென்னாபிரிக்க அணி 121 ஓட்டங்களுக்கு அதிகமாகப் பெற்றுக் கொண்டதால் இந்திய அணி அரையிறுதி வாய்ப்பை இழந்ததுடன் பாகிஸ்தான் அணி அரையிறுதி வாய்ப்பைப் பெற்றுக் கொண்டது.

இதன்படி அரையிறுதிப் போட்டிகளுக்கு இலங்கை, மேற்கிந்தியத் தீவுகள், அவுஸ்திரேலிய, பாகிஸ்தான் அணிகள் தகுதிபெற்றுள்ளன. இலங்கை - பாகிஸ்தான் அணிகளுக்கிடையிலான முதலாவறு அரையிறுதிப்போட்டி நாளை மறுதினம் 7 மணிக்கு ஆரம்பிக்கவிருக்கிறது.