திருமணம் நடக்கவில்லை என்று கூறி நான்கு பேரை திருமணம் செய்த நபர் கைது

சென்னையில் நான்கு பெண்களை ஏமாற்றி திருமணம் செய்தவரை பொலிஸார் கைது செய்துள்ளனர். இது குறித்து பொலிஸ் தரப்பில் கூறப்பட்டதாவது: 

சென்னை மதுரவாயல் ஆரப்பாக்கத்தைச் சேர்ந்தவர் மு. சரோஜினி (40). இவர் சென்னை புறநகரில் உள்ள ஒரு பொறியியல் கல்லூரியில் உதவிப் பேராசிரியராக பணியாற்றி வருகிறார். சரோஜினிக்கு ஜாதகத்தில் செவ்வாய் தோஷம் இருந்ததால் திருமணம் தாமதமாகி வந்ததாகக் கூறப்படுகிறது. 

அவருடைய குடும்பத்தினர், ஒரு திருமண இணையதளத்தில் சரோஜினி பெயரை பதிவு செய்துள்ளனர். இதைப் பார்த்த விழுப்புரம் மாவட்டம் திருக்கோவிலூரைச் சேர்ந்த அந்தோனி குரூஸ் (43) என்பவர் சரோஜினி குடும்பத்தாரிடம் பேசியுள்ளார். தான் கோவையில் பார்சல் சேவை நிறுவனம் நடத்தி வருவதாகவும், அனாதை என்றும் இன்னும் திருமணமாகாதவர் என்றும் அந்தோனி குரூஸ் கூறியுள்ளார். 

பின்னர் அந்தோனி குரூஸþம், சரோஜினி குடும்பத்தினரும் சந்தித்துப் பேசியதில் இருதரப்புக்கும் இடையே உடன்பாடு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து கடந்த மாதம் 5-ஆம் திகதி சரோஜினிக்கும், அந்தோனிக்கும் திருவேற்காட்டில் உள்ள கோயிலில் திருமணம் நடந்தது. 

திருமணமான சில நாள்களில் தனக்கு ரூ. 1 லட்சம் பணம் தேவை என சரோஜினியிடம் அந்தோனி கேட்டுள்ளார். அவ்வளவு பணம் இல்லை எனக் கூறியதைத் தொடர்ந்து, சரோஜினியை சென்னைக்கு அந்தோனி அனுப்பி வைத்துள்ளார். அதன் பிறகு சரோஜினியை அந்தோனி தொடர்பு கொள்ள வில்லையாம். 

இதனால் சந்தேகமடைந்த சரோஜினி குடும்பத்தினர் அந்தோனி குறித்து விசாரித்துள்ளனர். இதில் அந்தோனிக்கு ஏற்கனவே 3 பெண்களுடன் திருமணம் நடந்திருப்பது தெரியவந்துள்ளது. 

அதிர்ச்சியடைந்த சரோஜினி குடும்பத்தார், திருமங்கலம் அனைத்து மகளிர் பொலிஸ் நிலையத்தில் புகார் செய்தனர். புகாரின் பேரில் பொலிஸார் அந்தோனி மீது 6 சட்டப்பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்து, ஞாயிற்றுக்கிழமை அவரை கைது செய்தனர். 

அவரிடம் பொலிஸார் நடத்திய விசாரணையில் பல்வேறு தகவல்கள் வெளிவந்துள்ளன. அந்தோனி கடந்த 1997-ஆம் ஆண்டு தனது நெருங்கிய உறவு பெண்ணான சகாயமேரியை ஏமாற்றி திருமணம் செய்துள்ளார். கடந்த 2003-ல் சகாயமேரி தற்கொலை செய்து கொண்டதால், சேலத்தைச் சேர்ந்த ஆசிரியை உத்திரமேரியை திருமணம் செய்துள்ளார். பின்னர் அவரை விட்டு பிரிந்து கோவையைச் சேர்ந்த ஹேமாவதியை கடந்த ஆண்டு திருமணம் செய்துள்ளார். 

12ம் வகுப்பு வரை மட்டுமே படித்துள்ள அந்தோனி, தான் எம்.காம். படித்துள்ளதாகவும், தனது நிறுவனத்தில் பல கோடி ரூபாய் வருமானம் கிடைப்பதாகவும் கூறி அனைவரையும் ஏமாற்றியுள்ளார் என்பதும் பொலிஸார் விசாரணையில் தெரியவந்துள்ளது.