திருமணமான 4 மாதங்களின் பின் அத்தை மகனுடன் சேர்ந்து கணவனை அடித்துக் கொன்ற மனைவி?

 

கணவனை கழுத்தை நெரித்து கொலை செய்ததாக போலீசில் மனைவி பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ளார். திருமணமான 4 மாதங்களில் நடந்த இந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கல்பாக்கம் அடுத்த ஆயப்பாக்கம் கிராமத்தை சேர்ந்தவர் முருகன் (25). சவுண்ட் சர்வீஸ் ஊழியர். இவருக்கும் மாமல்லபுரம் அடுத்த மணமை கிராமத்தை சேர்ந்த திலகவதி(22)க்கும் கடந்த மே மாதம் திருமணம் நடந்தது. கடந்த 19ம் தேதி இருவரும் சாப்பிட்டுவிட்டு தூங்கினர். 20ம் தேதி காலை நீண்ட நேரமாகியும் முருகன் எழவில்லை. இதுகுறித்து திலகவதியிடம் முருகனின் தாயார் சுசீலா விசாரித்தார்.

அப்போது அவர், போதையில் தூங்கிக்கொண்டிருக்கிறார் என்று பதில் கூறியுள்ளார். இதனால் பதற்றமடைந்த சுசீலா, படுக்கை அறைக்கு சென்று முருகனை எழுப்ப முயன்றார். அப்போது முருகன் சுயநினைவின்றி கிடந்தார். அவரது உதடு, தோள்பட்டையில் ரத்த காயம் இருந்தது பார்த்து அதிர்ச்சி அடைந்தார். தகவலறிந்ததும் சதுரங்கப்பட்டினம் போலீசார் விரைந்து வந்தனர். சடலத்தை செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர்.

பிரேத பரிசோதனையில், முருகன் கழுத்தை நெரித்து கொலை செய்யப்பட்டது தெரிந்தது. இதை அறிந்த ஆயப்பாக்கத்தை சேர்ந்த 500க்கும் மேற்பட்டோர் இரவு 9 மணியளவில் வாயலூர் கிழக்கு கடற்கரை சாலையில் மறியல் செய்தனர். மாமல்லபுரம் டிஎஸ்பி கணேசன், திருக்கழுக்குன்றம் இன்ஸ்பெக்டர் இளங்கோவன் மற்றும் போலீசார் வந்து அவர்களை சமாதானப்படுத்தி அனுப்பினர்.

பின்னர் போலீசார் திலகவதியிடம் விசாரணை நடத்தினர். முதலில், போதை அதிகமானதால் இறந்திருக்கலாம் என்று கூறியுள்ளார். பின்னர் கிடுக்கிப்பிடி விசாரணையில் திலகவதி வாக்குமூலம் அளித்ததாக போலீசார் கூறியதாவது: முருகன் தினமும் குடித்து விட்டு வருவார். பல முறை கண்டித்தும் கேட்கவில்லை. சம்பவத்தன்று இரவும் குடித்து விட்டு வந்தார். படுத்ததும் தூங்கிவிட்டார். அவரை பார்த்ததும் ஆத்திரம் ஏற்பட்டது. அவரது உடலில் சூடு வைத்தும் எழுந்திருக்கவில்லை. உணர்வுகளை கட்டுப்படுத்த முடியாத ஆத்திரத்தில் தலையணையால் முகத்தை அமுக்கினேன். துண்டால் கழுத்தை இறுக்கினேன். மூச்சு திணறல் ஏற்பட்டு இறந்து விட்டார். ஆத்திரத்தில் மதியை இழந்து இவ்வாறு செய்துவிட்டேன் என திலகவதி கூறியதாக போலீசார் தெரிவித்தனர்.

முறை மாப்பிள்ளையுடன் சேர்த்து தீர்த்து கட்டினாரா?

இதற்கிடையில், கிராமத்தினரிடம் போலீசார் விசாரணை நடத்தினர். இதில் தெரியவந்ததாக அவர்கள் கூறியதாவது:. வாயலூர் கிராமத்தை சேர்ந்த முறை மாப்பிள்ளை சேட்டு என்பவருக்கும் திலகவதிக்கும் காதல் இருந்துள்ளது. இது திருமணத்துக்கு பிறகும் நீடித்தது. முருகன் இல்லாத நேரத்தில் திலகவதி வீட்டுக்கு சேட்டு வந்து சென்றுள்ளார். இதையறிந்த முருகன் திலகவதியை கண்டித்துள்ளார். இதன்பிறகும் தொடர்பு நீடித்துள்ளது.

கடந்த 19ம் தேதி பிற்பகல் ஆயப்பாக்கத்தில் உள்ள விநாயகர் கோயிலில் மின்விளக்கு அலங்காரம் செய்ய முருகன் சென்றார். அதற்பிறகு சேட்டு வந்து திலவதியிடம் பேசிக்கொண்டிருந்துள்ளார். இதை அறிந்து உடனே வீடு திரும்பிய முருகன், சேட்டுவை அடித்து துரத்தியுள்ளார். திலகவதியை கண்டித்துள்ளார். அப்போது ‘உன்னை கொல்லாமல் விடமாட்டேன்’ என்று முருகனை சேட்டு மிரட்டியதாக கூறப்படுகிறது. இந்த சம்பவத்துக்கு பிறகு மீண்டும் கோயிலுக்கு சென்ற முருகன், நள்ளிரவு வீடு திரும்பியுள்ளார். அதன்பிறகுதான் முருகன் கொலை செய்யப்பட்டுள்ளார்.

எனவே, முருகன் கொலைக்கும் சேட்டுவுக்கும் தொடர்பு உள்ளது. உண்மை சொல்ல திலகவதி மறுக்கிறார் என்று போலீசார் கருதுகின்றனர். திலகவதியை மாமல்லபுரம் மகளிர் காவல் நிலையத்தில் வைத்து பெண் போலீசார் விசாரிக்கின்றனர். தலைமறைவான சேட்டு அவரது பெற்றோரை போலீசார் தேடுகின்றனர். திலகவதிக்கும் ஆயப்பாக்கத்தை சேர்ந்த விஜயகுமார் என்பவருக்கும் நெருங்கிய பழக்கம் இருந்துள்ளது. இதனால், முருகன் கொலைக்கும் விஜயகுமாருக்கும் தொடர்பு இருக்கலாம் என்ற கோணத்திலும் விசாரணை நடக்கிறது.