திருடிவிட்டு கடைக்கு தீ வைத்த கொள்ளையர்கள்

தமிழகத்தின், சேலம் அருணாச்சலம் ஆசாரி தெருவில் ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்த ரோகித் என்பவர் ஷான் டெக்ஸ் சூப்பர் என்ற பெயரில் ஜவுளிக்கடை வைத்து நடத்தி வருகிறார்.

மூன்று மாடிகளை கொண்ட கட்டிடத்தின் தரைதளத்தில் இந்த துணிக்கடை அமைந்துள்ளது. தீபாவளி பண்டிகையையொட்டி கடையில் இலட்சக்கணக்கில் ஜவுளிகள் கொண்டுவரப்பட்டு விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்தது.

நேற்று தீபாவளி தினத்தையொட்டி வழக்கத்தை விட கடையில் வியாபாரமும் அதிகளவில் நடந்து உள்ளது. கடையில் இரவில் ரோகித் கணக்கு வழக்குப் பார்த்துக் கொண்டிருந்த போது, ரூ. 2 இலட்சத்தை (இந்திய ரூபா) கடையில் வைத்துவிட்டு இரவு 12 மணியளவில் கடையை பூட்டிவிட்டு சன்னியாசிகுண்டு பகுதியில் உள்ள தனது வீட்டிற்கு சென்று விட்டார்.

அதிகாலை இரண்டு மணியளவில் அந்த கடையில் தீ பிடித்து வெளியே அதிகளவில் புகை வெளியேறியது. அந்த வழியாக சென்ற ஆட்டோ டிரைவர் ஒருவர் இதைப்பார்த்து அதிர்ச்சி அடைந்து செவ்வாய்ப்பேட்டை தீயணைப்பு துறையினருக்கு தகவல் கொடுத்தார்.

பின்னர் தீ எரிந்து கொண்டு இருந்த கடையின் பூட்டை உடைத்துக் கொண்டு உள்ளே கொண்ட தீயணைப்பு துறையினர் போராடி தீயை அணைத்தனர். இந்த தீ விபத்தில் பாதிஅளவிற்கு துணிகள் எரிந்து தீயில் கருகியது. இதுகுறித்து கடையின் உரிமையாளர் ரோகித்துக்கு தகவல் கொடுக்கப்பட்டது.

அவர் விரைந்து வந்தார். மேலும் பொலிசாரும் சம்பவ இடத்திற்கு வந்தனர். கடை உரிமையாளர் உள்ளே சென்று பார்த்த போது ரூ.2 இலட்சம் பணம் காணாமல் போய் இருப்பது தெரியவந்தது.

முதலில் இந்த தீ விபத்துக்கான காரணம் என்ன என்று பொலிசார் விசாரணை நடத்தினர். தீ விபத்து நடந்த துணிக்கடையின் சுவரில் இரண்டு அடி வட்ட துளைப் போடப்பட்டு இருந்தது. எனவே கடை உரிமையாளர் பணம் காணவில்லை என்று கூறியதால் ஒருவேளை யாராவது கடையில் வியாபாரமான பணம் இருப்பது தெரிந்து சுவரில் துளைபோட்டு உள்ளே வந்து கொள்ளையடித்து சென்று இருக்கலாம் என்றும் அவர்களே கொள்ளையை திசைதிருப்ப தீ வைத்து சென்று இருக்கலாம் என்றும் பொலிசார் சந்தேகித்தனர்.

இதையடுத்து தடய அறிவியல் நிபுணர்கள் வரவழைக்கப்பட்டனர். அவர்கள் கடையில் பதிவாகி இருந்த கைரேகைகளை பதிவு செய்து கொண்டனர். மேலும் கடையில் எரிந்து கிடந்த சாம்பல்களையும் ஆய்வு செய்தனர்.

பொலிசார் தொடர்ந்தும் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.