தாம் விநியோகித்த டீசலுக்கும் வாகனங்கள் செயலிழந்தமைக்கும் தொடர்பில்லை

தாம் விநியோகித்த டீசலுக்கும் வாகனங்கள் செயலிழந்தமைக்கும் தொடர்பில்லை

 

பெற்றோலியக் கூட்டுத்தாபனத்திற்கு விநியோகிக்கப்பட்ட டீசல் பயன்படுத்தப்பட்டதால் வாகனங்களுக்கும் இயந்திரங்களுக்கும் பாதிப்பு ஏற்பட்டதாக சுமத்தப்படுகின்ற குற்றச்சாட்டுக்களை விட்டோல் கூட்டு நிறுவனம் முற்றாக நிராகரித்துள்ளது.

 


தாம் விநியோகித்த டீசலுக்கும் வாகனங்கள் மற்றும் இயந்திரங்கள் செயலிழந்தமைக்கும் இடையிலான தொடர்புகள் குறித்து எவ்வித ஆதாரங்களும் இல்லை என அந்த நிறுவனம் விடுத்துள்ள அறிக்கையொன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

டீசலை விநியோகிப்பதற்கு முன்னதாக பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் அதிகாரிகள் அது சர்வதேச தரத்திற்கு அமைவானதா என்பது தொடர்பான பரிசோதனைகளை நடத்தியதாகவும் விட்டோல் கூட்டு நிறுவனம் அறிவித்துள்ளது.

உள்நாட்டு விநியோக வளையமைப்புக்கு அனுப்பப்பட முன்னதாக டீசல் வேறு உற்பத்திகளுடன் கலக்கப்பட்டிருக்கலாம் என அந்த நிறுவனம் சுட்டிக்காட்டியுள்ளது.

பிராந்திய நாடுகளுக்கு விநியோகிக்கப்படும் பெருந்தொகை டீசலின் ஒரு பகுதியே இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்திற்கு விநியோகிக்கப்பட்டதாக விட்டோல் கூட்டு நிறுவனம் தெரிவித்துள்ளது.

ஏனைய நுகர்வோர் அந்த டீசலை எவ்வித பிரச்சினையும் இன்றி பயன்படுத்தி வருவதாகவும் அந்த நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த விடயம் தொடர்பாக நடத்தப்படுகின்ற பரசோதனைகளுக்கு ஒத்துழைப்பு வழங்கும் வகையில் சுயாதீன நிபுணர் ஒருவரை விட்டோல் நிறுவனம் இலங்கைக்கு அனுப்பியுள்ளது.

தமது நீணடகால வாடிக்கையாளரான இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் கடந்து வருடம் தமக்கு 22 விலை மனுக்களை வழங்கியுள்ளதாகவும் அதில் 15 விலை மனுக்கள் டீசல் விநியோகத்துடன் தொடர்புடையவை எனவும் விட்டோல் நிறுவனம் மேலும் தெரிவித்துள்ளது.