தமிழ்நாட்டின் அடுத்த முதலமைச்சராக பன்னீர்செல்வம் தெரிவு

தமிழ்நாட்டின் அடுத்த முதலமைச்சராக பன்னீர்செல்வம் தெரிவு
தமிழகத்தின் அடுத்த முதலமைச்சராக ஓ.பன்னீர் செல்வத்தை அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் இன்று ஒருமனதாக தேர்வு செய்ததை தொடர்ந்து அவரை ஆட்சியமைக்க வருமாறு ஆளுநர் அழைப்பு விடுத்தார்.
 
சொத்து குவிப்பு வழக்கில் ஜெயலலிதாவுக்கு 4 ஆண்டுகள் சிறை தண்டனை வழங்கப்பட்டுள்ளது. தண்டனை அறிவிக்கப்பட்டதும், மக்கள் பிரதிநிதித்துவ சட்டத்தின்படி, முதலமைச்சர் பதவியை இழந்ததோடு, சட்டமன்ற உறுப்பினர் பதவியையும் ஜெயலலிதா இழந்தார்.
 
இதனால், தமிழகத்தின் அடுத்த முதலமைச்சரை உடனடியாகத் தேர்வு செய்ய வேண்டிய கட்டாயம் அ.தி.மு.க.வுக்கு ஏற்பட்டது.
அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் கூட்டம்
 
இதையடுத்து, புதிய முதலமைச்சரைத் தேர்ந்தெடுப்பதற்காக அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்களின் ஆலோசனைக் கூட்டம், அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தலைமையில் இன்று மாலை ராயப்பேட்டையில் உள்ள அக்கட்சியின் தலைமை அலுவலகத்தில் நடைபெற்றது.
 
புதிய முதல்வராக ஓ.பன்னீர் செல்வம் தேர்வு
இந்த ஆலோசனை கூட்டத்தில், அ.தி.மு.க. சட்டமன்ற தலைவராக, அதாவது அடுத்த முதல்வராக அமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் தேர்ந்தெடுக்கப்பட்டார். இதன் மூலம் தமிழகத்தின் முதலமைச்சராக 2வது முறையாக ஓ.பன்னீர் செல்வம் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
 
ஆளுநருடன் சந்திப்பு
இதையடுத்து, அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் குழுவினர் அடுத்த முதல்வரை ஒருமனதாக தேர்ந்தெடுத்து கையெழுத்திட்ட கடிதத்தை, ஆளுநரிடம் வழங்குவதற்காக ஓ.பன்னீர் செல்வம் தலைமைல், மூத்த அமைச்சர்கள் நத்தம் விஸ்வநாதன், வைத்தியலிங்கம், எடப்பாடி பழனிச்சாமி உள்ளிட்டோர் தமிழக ஆளுநர் ரோசையாவை மாலை 6.45 மணி அளவில் சந்தித்தனர்.
அப்போது ஓ.பன்னீர் செல்வம் அ.தி.மு.க. சட்டமன்ற தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டதற்கான கடிதத்தை ஆளுநரிடம் வழங்கி ஆட்சியமைக்க உரிமை கோரினார்.
 
சுமார் 10 நிமிடங்கள் நடைபெற்ற இந்த சந்திப்பை தொடர்ந்து வெளியில் வந்த பன்னீர் செல்வம் உள்ளிட்ட யாரும் அங்கு திரண்டிருந்த செய்தியாளர்களிடம் எதுவும் தெரிவிக்காமல் சென்றுவிட்டனர்.
 
ஆட்சியமைக்க ஆளுநர் அழைப்பு
இந்நிலையில் இந்த சந்திப்பு முடிந்த சிறிது நேரத்தில் ஆட்சியமைக்க வருமாறு அ.தி.மு.க. சட்டமன்ற தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்ட பன்னீர் செல்வத்திற்கு ஆளுநர் அழைப்பு விடுத்தார். இது குறித்த தகவல் ஆளுநர் மாளிகை விடுத்த செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது.
 
பதவியேற்பு
அநேகமாக ஓ.பன்னீர் செல்வம் தலைமையிலான புதிய அமைச்சரவை நாளை திங்கட்கிழமை பதவி ஏற்கலாம் என்று கூறப்படுகிறது.இந்த அமைச்சரவையில் பெரிய அளவில் மாற்றங்கள் ஏதும் இருக்காது எனத் தெரிகிறது. ஜெயலலிதா தலைமையிலான அமைச்சரவையில் இடம்பெற்ற அமைச்சர்கள் அப்படியே இடம்பெறலாம் எனத் தெரிகிறது. ஒரு சிலர் புதிதாக சேர்த்துக்கொள்ளப்படவும் வாய்ப்புள்ளது.
 
போயஸ்கார்டனில் நடந்த ஆலோசனை
முன்னதாக அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் முடிவடைந்ததும், பன்னீர் செல்வம் மற்றும் மூத்த அமைச்சர்கள் போயஸ்கார்டன் சென்றனர். அங்கு ஜெயலலிதாவின் இல்லத்தில் சிறிது நேரம் ஆலோசனை நடைபெற்றது.
 
கடந்த முறை ஜெயலலிதா இதேபோல் நீதிமன்ற தீர்ப்பால் முதலமைச்சர் பதவி இழந்தபோது அமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் முதலமைச்சராக அப்போது நியமிக்கப்பட்டார். அதேபோல் இந்தமுறையும் அவருக்கு மீண்டும் முதல்வர் ஆகும் வாய்ப்பு கிடைத்துள்ளது.