தமிழ்த் தேசியப் பொறுப்பினை உணர்ந்து செயற்படவேண்டும்; ச.சஜீவன்

தமிழ்த் தேசியப் பொறுப்பினை உணர்ந்து செயற்படவேண்டும்; ச.சஜீவன்
உலகமெங்கும் தமிழ்பேசும் மக்கள் வாழும் இடங்களில் மாவீரர் நாள் உணர்வெழுச்சியுடன் கொண்டாடப்படும் இவ்வேளையில் புலம்பெயர் வாழ் தமிழ்மக்களுக்கு ஒரு முக்கியமான செய்தியை தெரிவிக்கவேண்டியதும் கடமையாகின்றது.
 
புலத்தில் மாவீரரை நினைவுகூரும் இச்சந்தர்ப்பத்தில் தாயகத்தில் இன்னமும் நெருக்கடிகள் அழுத்தங்கள் மற்றும் பல்வேறு இன்னல்களை எதிர்கொண்டு அங்கவீனர்களாகவும் ஆதரவற்றவர்களாகவும் எதிர்கால நம்பிக்கைகள் ஏதுமற்ற நிலையில் வாழும் போராளிகளையும் 
மாவீரர்தம் குடும்பங்களையும் நினைவில் கொண்டு அவர்களின் வாழ்வியல் மேம்பாட்டுக்கான உதவிகளையும் செயற்பாடுகளையும் புலம்பெயர்ந்து வாழ்ந்துவரும் தமிழ் உறவுகள் மேற்கொள்ள முன்வரவேண்டிய தமிழ்த் தேசியப் பொறுப்பினை உணர்ந்து செயற்படவேண்டும் என்பதை உணர்வுபூர்வமாக சிந்திக்கவேண்டும்.
 
எமது அரசியல் வாதிகள் வெறுமனே தத்தம் அரசியல் அபிலாஷைகளை இலக்குவைத்து புலம்பெயர் மக்களின் நிதிகளை பெற்று செய்யும் பிரசார நோக்கிலான உதவிகள் அளப்பரிய தியாகங்களை செய்துவிட்டு ஆதரவின்றி தவிக்கும் மக்களுக்கு எதுவிதத்திலும் உதவப்போவது கிடையாது என்பதை தொலைநோக்குடன் புரிந்துகொள்ளல்வேண்டும்.
 
இச்சமயத்தில் தலைவர் வே.பிரபாகரன் அவர்கள் முன் ஒருமுறை வெளிநாட்டு பத்திரிகையாளர் ஒருவர் தமிழீழம் அமையும்போது அந்த நாட்டில் நீங்கள் எத்தகைய பதவிப் பொறுப்பினை ஏற்பீர்கள் எனக் கேட்டபோது மாவீரர் மற்றும் போராளிகளின் நலன் பேணும் பொறுப்பினை எடுத்து அவர்களின் எதிர்காலத்திற்காக செயற்படுவேன் என்று கூறிய வார்த்தைகளை இங்குநினைவுபடுத்துதல் அவசியமாகின்றது.
 
அவரது இலட்சியத்தை - கனவை புரிந்துகொண்டு புலம்பெயர் தமிழ்மக்கள் வெறும் பதவி கனவுகளுக்காக உழைக்கும் அரசியல்வாதிகளை நம்பி நிற்காமல் சரியான முறையில் சிந்தித்து அல்லலுறும் போராளிகள் மற்றும் மாவீரர்களின் குடும்ப நலன்களுக்காக - வாழ்வு மேம்பாட்டுக்காக சிந்தித்து செயற்பட முன்வருவதற்கான பிரதிக்கிணையை இம்மாவீரர் நாளில் எடுத்துக்கொள்வது மிக அவசியம்.
 
ச. சஜீவன்
துணைத் தவிசாளர் வலிவடக்கு பிரதேசசபை
காங்கேசன்துறை.