தமிழகத்தில் தீபாவளியன்று மாசு ஆய்வு...?

தீபாவளி பண்டிகையில், வெடிகளால் ஏற்படும் மாசு அளவைக் கண்டறிய ஆய்வு நடத்தப்படவுள்ளது.

தீபாவளி தினத்தில் பட்டாசு மூலமாக காற்று மண்டலம் அதிகளவு மாசுபடுவதாக கூறப்படுகிறது.

இது தொடர்பாக தீபாவளி தினத்தில் காற்று மாசு ஆய்வு நடத்த மத்திய சுற்றுச்சூழல் துறை உத்தரவிட்டுள்ளது.

தமிழகத்தில் சென்னை, கோவை, மதுரை, சேலம், திருச்சி உள்ளிட்ட பகுதியில் 12 மாசு கட்டுபாட்டு வாரிய ஆய்வகத்தின் மூலமாக 30க்கும் மேற்பட்ட இடத்தில் ஆய்வு நடக்கவுள்ளது.

தீபாவளி தினமான வரும் 13ம் திகதி காலை 6 மணி முதல் வரும் 14ம் திகதி காலை 6 மணி வரை மாசு ஆய்வு நடத்தப்படவுள்ளது. கோவை மாவட்டத்தில், கலெக்டர் அலுவலகத்தின் பின் பகுதி, பொன்னையராஜபுரம், பீளமேடு தனியார் கல்லூரி அருகே மாசு கட்டுபாட்டு துறை அதிகாரிகள் ஆய்வு நடத்தவுள்ளனர்.

கடந்த 6ம் திகதி தீபாவளிக்கான முன்னோட்ட மாசு ஆய்வு நடத்தப்பட்டது. தீபாவளி தினத்தில் நடத்தப்படும் மாசு ஆய்வின் விவரங்கள் மத்திய சுற்றுச்சூழல் துறைக்கு அனுப்பி வைக்கப்படும்.

இந்த அறிக்கையின் அடிப்படையில், பட்டாசுக்களில் காற்று மாசு ஏற்படுத்தும் பொருட்களுக்கு கட்டுபாடு கொண்டு வர திட்டமிடப்பட்டுள்ளது.