தடை தாண்டி வருகிறது ‘கத்தி’ அம்மாவுக்கு விஜய் நன்றி!

தடை தாண்டி வருகிறது ‘கத்தி’ அம்மாவுக்கு விஜய் நன்றி!
‘கத்தி’ திரைப்படம் சுமூகமாக வெளிவர ஆதரவு தந்த தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்கு நன்றி தெரிவிப்பதாக, நடிகர் விஜய் குறிப்பிட்டுள்ளார்.
 
மேலும், ‘கத்தி’ பட விளம்பரங்களில் லைக்கா நிறுவனத்தின் பெயர் நீக்கப்பட்டுவிட்டதாகவும், அதன் மூலம் பிரச்சினை முடிவுக்கு வந்துவிட்டதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
 
‘கத்தி’ படத்தின் பிரச்சினை முடிவுக்கு வந்தது. நாளை காலை முதல் திரையரங்குகளில் டிக்கெட் முன்பதிவு தொடங்கப்பட்டும் என்று படக்குழு நேற்றிரவு (அக்.20) அறிவித்தது. ஆனால், நேற்றிரவே ‘கத்தி’ திரைப்படம் வெளியாக இருந்த சத்யம் திரையரங்கம், உட்லண்ட்ஸ் திரையரங்கம் ஆகியவை மர்ம நபர்களால் தாக்கப்பட்டுள்ளன.
 
இந்நிலையில், நடிகர் விஜய் இன்று வெளியிட்ட அறிக்கையில், “சில நாட்களாக சில தமிழ் அமைப்புகள் ‘கத்தி’ திரைப்படத்தின் தயாரிப்பாளர் லைக்கா நிறுவனத்தின் பெயரை விளம்பரங்களில் நீக்க கோரிக்கை வைத்திருந்தனர்.
 
அவர்களின் வேண்டுக்கோளை மதித்து படத்தின் விளம்பரங்களில் லைக்கா பெயரை நீக்க தயாரிப்பாளர்கள் ஒத்துக்கொண்டனர்.
 
எனவே, இந்த பிரச்சினை சுமூகமாக முடிந்துவிட்டது.  எனவே, எதிர்பார்ப்போடு காத்திருந்த ரசிகர்களும், மக்களும், ‘கத்தி’ திரைப்படத்தை சந்தோஷமாக கண்டுகளிக்குமாறு வேண்டிக் கொள்கிறேன்.
 
‘கத்தி’ திரைப்படம் சுமூகமாக வெளிவர எங்களுக்கு ஆதரவு தந்த தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்கும், தமிழக காவல் துறைக்கும், தமிழ்நாடு திரையரங்க உரிமையாளர்களூக்கும், தமிழக அமைப்புகளின் உணர்வுகளுக்கு மதிப்பளித்து லைக்கா பெயரை நீக்கிய தயாரிப்பாளர்களுக்கும் எனது மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்” என்று விஜய் குறிப்பிட்டுள்ளார்.