டெல்லி பெண் பாலியல் பலாத்கார புகைப்படங்களால் சர்ச்சை!

டெல்லி பெண் பாலியல் பலாத்கார புகைப்படங்களால் சர்ச்சை!
டெல்லியில் கடந்த 2012ஆம் ஆண்டு டிசம்பர் 16ம் திகதி ஓடும் பேருந்தில் ஒரு கும்பலால் பாலியல் பலாத்காரத்திற்குள்ளாக்கப்பட்டு பின்னர் உயிருக்குப் போராடி உயிரிழந்த நிர்பயா சம்பவத்தை வைத்து ஒரு புகைப்படக் கலைஞர் ஒருவர் புகைப்படத் தொகுப்பு ஒன்றை உருவாக்கியுள்ளமை சர்ச்சையை தோற்றுவித்துள்ளது.
 
ராஜ் ஷெட்டி என்ற மும்பை புகைப்படக்காரர், த ரோங் டர்ன் (The wrong turn) என்ற பெயரில் இந்த புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.
 
அதில் ஒரு படத்தில், ஒரு பெண் ஓடும் பேருந்துக்குள், சிலரிடமிருந்து தப்பிக்க முயல்வது போல உள்ளது. இன்னொரு படத்தில் இரு ஆண்களிடமிருந்து தப்ப அவர் போராடுவது போல உள்ளது. அதில் ஒரு நபர் இந்தப் பெண்ணின் கால்களை பலமாக பிடித்து இழுப்பது போல உள்ளது.
 
இந்தப் புகைப்படத் தொகுப்பு கடும் எதிர்ப்புகளையும், கண்டனங்களையும் ஏற்படுத்தியுள்ளது. ஆனால் இதுகுறித்து ஷெட்டி விளக்குகையில், இது டெல்லி பாலியல் பலாத்கார சம்பவத்தை முன்மாதிரியாகக் கொண்டு எடுக்கப்படவில்லை. நிச்சயம் அதை மனதில் வைத்து இதை நான் எடுக்கவில்லை. இது நிர்பயா இல்லை. ஆனால் சமூகத்தில் இப்படிப்பட்ட பாதிப்புகள் இருப்பதைத்தான் நான் எனது புகைப்படங்களில் சித்தரித்துள்ளேன் எனக் குறிப்பிட்டுள்ளார்.
 
எனது தாயார், சகோதரி, காதலி ஆகியோருடன் கூடிய சமுதாயத்தில்தான் நானும் வாழ்கிறேன். எனவே இதுபோன்ற அபாயம் யாருக்கு வேண்டுமானாலும் நடக்கலாம் என்றார்.
 
ஆனால் ஷெட்டியின் இந்தப் புகைப்படத் தொகுப்புக்கு ட்விட்டர், பேஸ்புக்கில் கடும் விமர்சனங்கள் குவிந்து வருகின்றன.