டென்னிஸ் தரநிலையில் ஜோகோவிச்சுக்கு முதலிடம்

கிராண்ட்ஸ்லாம் போட்டிகளில் மிக உயரியதான விம்பிள்டன் டென்னிஸ் போட்டி லண்டனில் வருகிற 23–ந் திகதி தொடங்குகிறது. 

இந்த போட்டிக்கான தரநிலை நேற்று வெளியிடப்பட்டது. இதில் ஆண்கள் ஒற்றையர் பிரிவில், ஏ.டி.பி. உலக தரவரிசையில் 2–வது இடம் வகிப்பவரும், முன்னாள் சாம்பியனுமான செர்பியாவின் நோவக் ஜோகோவிச்சுக்கு முதலிடம் வழங்கப்பட்டுள்ளது. 

விம்பிள்டன் டென்னிஸ் புல்தரையில் நடக்கும் போட்டி என்பதால், உலக தரவரிசை முறையை தவிர்த்து புல்தரையில் அசத்தும் வீரர்களுக்கு தரநிலையில் முன்னுரிமை வழங்கப்படுவது வழக்கம். 

இதன் அடிப்படையிலேயே உலக தரவரிசையில் நம்பர் ஒன் இடத்தில் உள்ள ஸ்பெயினின் ரபெல் நடாலுக்கு, விம்பிள்டன் போட்டித் தரவரிசையில் 2–வது இடம் கொடுக்கப்பட்டு உள்ளது. கடந்த ஆண்டு விம்பிள்டனில் நடால் முதல் சுற்றிலேயே மண்ணை கவ்வினார் என்பது குறிப்பிடத்தக்கது. 

நடப்பு சாம்பியன் இங்கிலாந்தின் ஆன்டி முர்ரே 3–வது இடத்தையும், சுவிட்சர்லாந்தின் ரோஜர் பெடரர் 4–வது இடத்தையும் பெற்றுள்ளனர். பெண்கள் பிரிவில் அமெரிக்காவின் செரீனா வில்லியம்ஸ் போட்டித் தரவரிசையில் முதல்நிலை வகிக்கிறார். 

சீனாவின் லீ நாவுக்கு 2–வது இடமும், ருமேனியாவின் சிமோனா ஹலேப்புக்கு 3–வது இடமும், போலந்தின் அக்னீஸ்கா ராட்வன்ஸ்காவுக்கு 4–வது இடமும், சமீபத்தில் பிரெஞ்ச் ஓபனை கைப்பற்றிய ரஷியாவின் மரிய ஷரபோவாவுக்கு 5–வது இடமும் கிடைத்துள்ளது. 

பெண்கள் இரட்டையரில் இந்தியாவின் சானியா மிர்சா–ஜிம்பாப்வேயின் காரா பிளாக் ஜோடிக்கு 4–வது இடமும், ஆண்கள் இரட்டையரில் இந்தியாவின் லியாண்டர் பெயஸ்–செக்குடியரசின் ராடக் ஸ்டெபனக் இணைக்கு 5–வது இடமும், ரோகன் போபண்ணா (இந்தியா)–குரேஷி (பாகிஸ்தான்) கூட்டணிக்கு 8–வது இடமும் வழங்கப்பட்டுள்ளது.