டி-20 போட்டிகளில் நாளை முதல் அனல் பறக்கும்

டி-20 போட்டிகளில் நாளை முதல் அனல் பறக்கும்

ஐசிசி உலக கிண்ண டி-20 தொடரில் நாளை முதல் முக்கிய அணிகள் மோதும் 2ம் சுற்று லீக் போட்டிகள் தொடங்குகின்றன. 

ஆரம்பத்திலேயே அனல் பறக்கும் இந்தியா, பாகிஸ்தான் மோதல் நடக்கிறது. உலக கிண்ண டி-20 தொடர் பங்கதேஷில் கடந்த 16ம் திகதி தொடங்கியது. 

இதில் முதல் சுற்று எனப்படும் தகுதி ஆட்டங்கள் தற்போது நடக்கிறது. ஏ பிரிவில் பங்கதேஷ், ஆப்கானிஸ்தான், ஹாங்காங், நேபாளம் மற்றும் பி பிரிவில் அயர்லாந்து, ஜிம்பாப்வே, நெதர்லாந்து, ஐக்கிய அரபு எமிரேட்ஸ் என 8 அணிகள் பங்கேற்ற முதல் சுற்று போட்டிகள் நாளையுடன் நிறைவடைகிறது. 

இதில், இரு பிரிவிலும் முதல் இடத்தை பெறும் 2 அணிகள் 2வது சுற்றில் முக்கிய அணிகளுடன் மோதும். கத்துக்குட்டி அணிகள் மோதியதால் சுவாரஸ்யமே இல்லாமல் இருந்த உலக கிண்ண டி-20 தொடரில் இனிமேல்தான் அனல் பறக்கப் போகிறது. 2ம் சுற்று போட்டிகள் நாளையிலிருந்து ஆரம்பிக்கின்றன. 

இதில், 10 அணிகள் 2 பிரிவாக பிரிக்கப்பட்டுள்ளன. முதல் பிரிவில் இலங்கை, இங்கிலாந்து, தென் ஆப்ரிக்கா, நியூசிலாந்து, பி பிரிவில் தகுதி பெறும் அணி மற்றும் 2வது பிரிவில் மேற்கிந்திய தீவுகள், இந்தியா, பாகிஸ்தான், அவுஸ்திரேலியா, ஏ பிரிவில் தகுதி பெறும் அணியும் இடம் பெற்றுள்ளன. 

நாளை மிர்பூரில் நடக்கும் 2வது சுற்றின் முதல் போட்டியில் பரம எதிரிகளான இந்தியா, பாகிஸ்தான் அணிகள் மோதுகின்றன. சமீபகாலமாக இந்திய அணி அடுத்தடுத்த தோல்விகளால் கடும் அவப்பெயருடன் உள்ளது. தென் ஆப்ரிக்கா, நியூசிலாந்து, ஆசிய கிண்ணம் என தொடர்ந்து 3 தொடரிலும் படுதோல்விகளை சந்தித்துள்ளது. 

இதனால், உலக கிண்ண டி-20 தொடரில் வெற்றி பெற்று இழந்த பெருமையை மீட்க வேண்டிய கட்டாயத்தில் டோனி அன்ட் கோ களமிறங்குகிறது. 

அதே நேரத்தில், ஆசிய கோப்பையில் இந்திய அணி வெளியேறுவதற்கு முக்கிய காரணமாக இருந்தது பாகிஸ்தான் அணியே. அதற்கும் சரியான பதிலடி தர வேண்டிய நெருக்கடியில் இந்திய வீரர்கள் களமிறங்குகின்றனர். 

இம்முறை, யுவராஜ், ரெய்னா போன்ற அனுபவ வீரர்களுடன் சிறிய ஓய்வுக்கு பிறகு கேப்டன் டோனியும் அணிக்கு திரும்பியிருப்பதால் முழு பலத்துடன் காணப்படுகிறது. 

தொடக்க போட்டியிலேயே பாகிஸ்தானை வீழ்த்தினால் தான் இந்திய அணிக்கு நம்பிக்கை கிடைக்கும் என்பதால் ரசிகர்களும் இப்போட்டியை ஆர்வமுடன் எதிர்பார்த்து காத்துள்ளனர். 

இந்த இரண்டாவது சுற்றில் இரு பிரிவிலும் முதல் 2 இடங்களை பிடிக்கும் 4 அணிகளும் அரை இறுதிக்கு முன்னேறும். அரை இறுதியில் வெற்றி பெறும் 2 அணிகள் ஏப்ரல் 6ம் திகதி மிர்பூரில் நடக்கும் இறுதிப் போட்டியில் பங்கேற்கும்.