ஜெ.க்கு ஆதரவாக திரையுலகினர் போராட்டம், படப்பிடிப்புப் பணிகள் ஸ்தம்பிதம்

ஜெ.க்கு ஆதரவாக திரையுலகினர் போராட்டம், படப்பிடிப்புப் பணிகள் ஸ்தம்பிதம்

தமிழகத்தின் முன்னாள் முதல்வரும் அ.தி.மு.க. பொதுச் செயலாளருமான செல்வி. ஜெயலலிதாவுக்கு,சொத்து குவிப்பு வழக்கில், 4 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து பெங்களூர் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியமைக்கு எதிர்ப்பு தெரிவித்தும் தங்களது வேதனையை வெளிப்படுத்தும் விதமாகவும் தமிழ்த் திரையுலகம் சார்பில் இன்று செவ்வாயக்கிழமை(30) மௌன உண்ணாவிரதப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

காலை 9 மணிக்கு ஆரம்பமாகிய இந்த உண்ணாவிரதப் போராட்டம் சென்னை, சேப்பாக்கம் விருந்தினர் மாளிகை முன்பாக நடைபெற்று வருகிறது. 

இந்த போராட்டத்தில் தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம், தென்னிந்திய திரைப்பட வர்த்தக சபை, தென்னிந்திய திரைப்பட நடிகர்கள் சங்கம், தமிழ்நாடு திரைப்பட இயக்குநர்கள் சங்கம், தென்னிந்திய திரைப்பட தொழிலாளர்கள் சம்மேளனம், தமிழ்நாடு திரையரங்க உரிமையாளர்கள் சங்கம், சின்னத்திரை கலைஞர்கள் கூட்டமைப்பு உள்ளிட்ட தமிழ்த் திரையுலகின் பல்வேறு அமைப்புகள் பங்கேற்றுள்ளன.

மௌன உண்ணாவிரதப் போராட்டத்தில் திரையுலகினர் அனைவரும் கலந்து கொள்வதால் சென்னை மற்றும் புறநகர்ப் பகுதிகளில் நடைபெறவுள்ள படப்பிடிப்பு உள்ளிட்ட அனைத்துத் திரைப்படப் பணிகளும் இன்று நிறுத்தப்பட்டுள்ளன.

தமிழகம் முழுவதும் திரையரங்குகளின் காட்சிகள் மாலை 6 மணி வரை ரத்து செய்யப்படுகின்றன என்றும் தமிழ்த் திரை அமைப்புகளின் கூட்டமைப்பு அறிவித்துள்ளது.

உண்ணாவிரதத்தில், முன்னணி நட்சத்திரங்களான சூர்யா, விக்ரம், கார்த்தி உட்பட நடிகர் சூரி இயக்குனர் பாலா ஆகியோரும் கலந்து கொண்டனர்.

விஜய், அஜீத் போன்றவர்கள் இந்த உண்ணாவிரதத்தில் நிச்சயம் பங்கேற்பார்கள் என்று எதிர்ப்பார்க்கப்பட்ட நிலையில், அவர்கள் இருவருமே இன்று உண்ணாவிரதத்துக்கு வரவில்லை.

நடிகர் சங்க தலைவர் சரத்குமார், பொதுச் செயலாளர் ராதாரவி, நடிகர்கள் பாக்யராஜ், ஸ்ரீகாந்த், ராமராஜன், சக்தி, எம்.எஸ்.பாஸ்கர், செந்தில், டெல்லி கணேஷ், மன்சூர் அலிகான், மயில்சாமி, சரவணன், குண்டு கல்யாணம், மனோபாலா, நடிகைகள் வெண்ணிற ஆடை நிர்மலா, சச்சு, நளினி, குயிலி, சி.ஆர்.சரஸ்வதி, பாத்திமா பாபு, ஆகியோர் கலந்து கொண்டனர்.

மேலும், இயக்குநர்கள் சங்க தலைவர் விக்ரமன், இயக்குநர்கள் எஸ்.ஏ.சந்திரசேகரன், பி.வாசு, மனோஜ்குமார், ஆர்.கே.செல்வமணி, ரவிமரியா, ஆதி ராம், தயாரிப்பாளர்கள் கலைப்புலி தாணு, ஏ.எல்.அழகப்பன், கே.டி.குஞ்சுமோன், காஜாமைதீன், இப்ராகிம் ராவுத்தர் உட்பட பலர் இதில் கலந்து கொண்டுள்ளனர். இந்த மௌன உண்ணாவிரதப் போராட்டம் மாலை 5 மணி வரை நடைபெறவுள்ளது. (இந்திய ஊடகங்கள்)