ஜெயலலிதா மீதான தீர்ப்பு! தமிழகத்தி பல இடங்களிலும் பரவும் வன்முறை

ஜெயலலிதா மீதான சொத்துக்குவிப்பு வழக்கில் 18 ஆண்டுகளுக்குப் பிறகு இன்று தீர்ப்பளிக்கப்பட்டிருக்கிறது. குற்றம் சாட்டப்பட்ட ஜெயலலிதா உள்ளிட்ட 4 பேரும் குற்றவாளி என தீர்ப்பளித்த சிறப்பு நீதிமன்ற நீதிபதி குன்ஹா, பிற்பகல் 3 மணிக்கு தண்டனை விவரம் அறிவிக்கப்படும் என தெரிவித்தார். 
 
இதையடுத்து தண்டனைக்கான வாதம் நடைபெற்றது. அப்போது, அரசுத் தரப்பு வழக்கறிஞர் வாதாடும்போது, ஜெயலலிதா உள்ளிட்ட குற்றவாளிகளுக்கு 8 ஆண்டுகள் சிறைத்தண்டனை வழங்க வேண்டும் என வலியுறுத்தினார். 2 ஆண்டுகள் தண்டனை வழங்க வேண்டும் என ஜெயலலிதா தரப்பு வழக்கறிஞர் வாதாடினார். 
 
ஜெயலலிதா குற்றவாளி என தீர்ப்பளிக்கப்பட்டதையடுத்து தமிழகத்தில் பல்வேறு இடங்களில் பஸ்கள் நிறுத்தப்பட்டன. கடைகள் அடைக்கப்பட்டன. பல்வேறு இடங்களில் கடைகளை அடைக்கும்படி உரிமையாளர்களை மிரட்டியுள்ளனர். அரசு பேருந்துகளும் சேதப்படுத்தப்பட்டன. காஞ்சிபுரத்தின் அருகே ஒரு பேருந்துக்கு தீ வைக்கப்பட்டது என தமிழக ஊடகமான மாலை மலர் குறிப்பிட்டுள்ளது. 
 
தீர்ப்பை எதிர்த்தும் ஜெயலலிதாவுக்கு ஆதரவாகவும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றன. இதனால் பதட்டம் ஏற்பட்டுள்ளது. புதுக்கோட்டையில் கலவரம் ஏற்பட்டது. இதனால் பொலிசார் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டது. கர்நாடகத்தில் இருந்து தமிழகத்திற்கு வரும் பேருந்துகள் நிறுத்தப்பட்டன. 
 
இதேவேளை தி.மு.க. தலைவர் கருணாநிதியின் கொடும்பாவியை அ.தி.மு.க. வினர் வீதியில் போட்டு தீ வைத்து எரித்தனர். அப்போது கருணாநிதிக்கு எதிராக கோஷங்களையும் அவர்கள் எழுப்பினர். 
 
இதன் காரணமாக அப் பகுதியில் இருந்த கடைகளும் அடைக்கப்பட்டன. கட்சி அலுவலகம் மற்றும் அதனை சுற்றியிருந்த பகுதிகளில் பெரும் பரபரப்பு நிலவியது. 
 
ஜெயலலிதாவுக்கு எதிரான தீர்ப்பு வெளிவந்தவுடன் அ.தி.மு.க.வினர் ஆங்காங்கே கூட்டம் கூட்டமாக திரண்டனர். பெரும்பாலான இடங்களில் கல்வீச்சு சம்பவங்களும் நடைபெற்றன. தாம்பரம் எம்.ஆர்.எம்.தெரு பகுதியில் ஒரு கும்பல் கடைகள் மீது சரமாரியாக கற்களை வீசி தாக்குதல் நடத்தியது. 
 
மயிலாப்பூர், சாந்தோம் பகுதியில் உள்ள சுப்பிரமணிய சாமியின் வீடு மீதும் கல் வீசப்பட்டது என மாலை மலர் செய்திகள் தெரிவித்துள்ளன. 
 
அம்பத்தூர், வில்லி வாக்கம் ஆகிய இடங்களில் கருணாநிதி, சுப்பிரமணியசாமி உருவ பொம்மைகளை அ.தி.மு.க.வினர் எரித்தனர். 
 
இந்தநிலையில் அ.தி.மு.க. மூத்த தலைவர்கள் பெங்களூரில் ஆலோசனை நடத்தினார்கள். ஜெயலலிதாவுக்கு அதிக பட்ச தண்டனை வழங்கப்பட்டால் என்னென்ன நடவடிக்கைகள் செய்யப்பட வேண்டும் என்று இதன்போது ஆலோசிக்கப்பட்டது. 
 
இதைத் தொடர்ந்து ஜெயலலிதாவை பிணையில் உடனே எடுப்பதற்கான ஏற்பாடுகளும் செய்யப்பட்டன.