ஜெயலலிதா இனி மோடிக்கு கடிதம் எழுத தேவையில்லை

ஜெயலலிதா இனி மோடிக்கு கடிதம் எழுத தேவையில்லை

தமிழக முதல்வர் ஜெயலலிதா, டில்லி சென்று பிரதமர் மோடியைச் சந்தித்தது, நல்ல திருப்பமாகும். கடந்த, ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில், அடிக்கடி பிரதமருக்கு சளைக்காமல் கடிதம் எழுதிய முதல்வர், இத்தடவை பிரதமரை மட்டும் அல்ல, நிதியமைச்சர் அருண்ஜெட்லி உட்பட பல்வேறு முக்கிய இலாகா தொடர்பான அமைச்சர்களையும் சந்தித்திருக்கிறார். 

பிரதமர் மோடி இன்று, தனி மெஜாரிட்டி ஆட்சி நடத்துகிறார் என்பதையும், தெளிவாக குறிப்பிட்ட முதல்வர், ´தேவைப்பட்டால் மத்திய ஆட்சிக்கு ஆதரவு குறித்து பரிசீலிக்கப்படும்´ என, கவனமாக கருத்து தெரிவித்திருக்கிறார். 

பிரதமர் மோடியும், தமிழக முதல்வரும் சந்திப்பதற்கு, 30 நிமிடங்கள் ஒதுக்கப்பட்டிருந்த போதும், அது, 50 நிமிடங்களாக நீடித்தது. பிரதமர் தன் கோரிக்கைகளை கவனமாக கேட்டதாக, முதல்வரும் தன் பேட்டியில் தெரிவித்திருக்கிறார்.மோடி பிரதமரான பின் அளித்த பேட்டி ஒன்றில், ´மாநில உணர்வுகளை மதிப்பேன்´ என்று அழுத்தமாக கூறியது, குஜராத் முதல்வராக அவர் இருந்தபோது அடைந்த அனுபவங்களை மறக்கவில்லை என்பதை காட்டியது. 

மேலும், முதல்வர் ஜெயலலிதாவை சந்திக்கும் முன், ஒடிசா முதல்வர் நவீன்பட்நாயக், கேரள முதல்வர் உம்மன் சாண்டி ஆகியோரை சந்தித்து பேசிய விதம், பிரதமர் பெடரல் தத்துவத்தை சிறக்க வைக்கும் சுபாவம் கொண்டிருக்கிறார் என்பதை வெளிப்படுத்தியது. 

முதல்வர் ஜெயலலிதாவும், பிரதமர் மோடியும் ஏற்கனவே நீண்ட காலமாக, பரஸ்பரம் புரிந்து கொண்டு தங்கள் கட்சிகளை வழிநடத்துபவர்கள் என்பது எல்லாருக்கும் தெரியும். 

முதல்வர் ஜெயலலிதா, பிரதமரைச் சந்தித்த பின், நிதியமைச்சர் ஜெட்லியை சந்தித்திருக்கிறார். முதல்வரை, ஜெட்லி, தன் அலுவலக வாசல்வரை வந்து வழிஅனுப்பியது இந்த நாட்டின் பண்பாட்டு பதிவின் அடையாளம். அதற்குபின் தமிழ்நாடு இல்லத்தில், சட்ட அமைச்சர் ரவிசங்கர் பிரசாத், தொழில்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமனை சந்தித்து பேசியுள்ளார். 

இவைகளை எல்லாம் பார்க்கும் போது, இனி தமிழகத்தின் சார்பில் கடிதம் மட்டும் எழுதி, மத்திய அரசுக்கு நம் பிரச்னைகளை கொண்டு செல்லும் காலம் முடிந்து விட்டது தெளிவாகிறது. 

நேருக்கு நேர் சந்தித்து, பிரச்னைகள் குறித்து பேசி, தமிழகத்தின் வளர்ச்சிக்கு உரியவற்றை, மத்திய அரசிடம் காலக்கெடுவுடன் பெற வாய்ப்பாக, இது அமைந்தது நல்ல திருப்பம். 

அ.தி.மு.க.,விடம், 37 லோக்சபா எம்.பி.,க்கள் உள்ளனர். சபையில் இவர்களுக்கு பேசுவதற்கு அதிக வாய்ப்பு இனி இருக்கும். மெஜாரிட்டி உள்ள அரசு என்பதால், அர்த்தமற்ற சலசலப்புகள் இருக்காது. கூட்டணி தர்மம் என்ற பெயரில், மவுனம் காக்கும் அரசை இனிக் காண முடியாது. 

தமிழகத்தை சார்ந்த முக்கிய பிரச்னைகளை தெளிவாக எடுத்துரைத்து, சாதகமாக்கி கொள்ள, சபை நடவடிக்கைகளில் ஆர்வமாக பங்கேற்கவும் அ.தி.மு.க., - எம்.பி.,க்களை, முதல்வர் நிச்சயம் தயார் படுத்துவார் என்று நம்பலாம். 

நீண்ட நாட்களுக்கு பின், லோக்சபாவில், கேள்வி நேரம், கேள்வி நேரத்திற்கு அடுத்த பூஜ்ய நேரம், முக்கியமான விஷயங்களை சபாநாயகர் அனுமதியுடன் பேசும் கால அவகாசம் என, இயல்பு நிலை திரும்புவதை நம் எம்.பி.,க்கள் பயன்படுத்திக் கொள்வர் என, ஆவலாக எதிர்பார்க்கலாம்.