ஜெயலலிதாவின் பிணை மனு மீதான விசாரணை ஒத்திவைப்பு

ஜெயலலிதாவின் பிணை மனு மீதான விசாரணை ஒத்திவைப்பு

தமிழகத்தின் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா ஜெயராமின் பிணை மனு மீதான விசாரணையை ஒரு வாரத்துக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. 

ஜெயலலிதாவின் பிணை மனு மீதான விசாரணை, இன்று பெங்களுரிலுள்ள கர்நாடக உயர் நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுக்கப்பட்டது. அப்போது, ஜெயலலிதா தரப்பில் சட்டத்தரணி ராம் ஜெத்மலானி ஆஜரானார். சொத்துக்குவிப்பு வழக்கில் தமிழக அரசு சட்டத்தரணியாக பணியாற்றிய பவானி சிங், மீண்டும் அரசு தரப்பில் ஆஜராகினார். 

ஆனால், பவானி சிங்கை அரச தரப்பு சட்டத்தரணியாக் கருதுவதில் குழப்பம் இருப்பதாக நீதிபதி ரத்தினகலா அதிரடியாக அறிவித்தார். ஏனெனில், சிறப்பு நீதிமன்றத்தில் சொத்துக்குவிப்பு வழக்கை விசாரிக்க மட்டுமே பவானி சிங் அரசு சிறப்பு சட்டத்தரணியாக நியமிக்கப்பட்டார். அந்த வழக்கு கடந்த சனிக்கிழமையோடு முடிந்துவிட்டது. எனவே, பவானி சிங்கின் பதவிக் காலம் அத்தோடு நிறைவடைந்துவிட்டது என்று நீதிபதி தெரிவித்தார்.

சிறப்பு நீதிமன்ற வழக்கோடு பவானி சிங்கின் பதவிக்காலம் முடிந்துவிட்ட நிலையில், ஜெயலலிதாவின் பிணை மனு மீதான விசாரணையில் அரசு தரப்பில் ஆஜராகும் சட்டத்தரணி யார் என்பதை இன்னும் கர்நாடக அரசு தீர்மானிக்கவில்லை. எனவே, அரச தரப்பு சட்டத்தரணி  யார் என்பதை தீர்மானித்து சொல்ல வேண்டும் என்று உயர்நீதிமன்றம், கர்நாடக அரசுக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

அரசுக்கு நோட்டீஸ் அனுப்பிய பிறகு ஜாமீன் மனு மீதான விசாரணையை அடுத்த மாதம் 6ஆம் திகதிக்கு ஒத்திவைத்தார் நீதிபதி ரத்தின கலா. இந்த குறிப்பிட்ட காலகட்டத்திற்குள் கர்நாடக அரசு, உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியுடன் இணைந்து ஆலோசனை நடத்தி, ஜெயலலிதாவின் பிணை மனு மீதான விசாரணைக்கு யாரை அரச சட்டத்தரணியாக நியமிப்பது என்பதை அறிவிக்க வேண்டும். 

கர்நாடக அரசு நினைத்தால் பவானி சிங்கையே அரசு தரப்பு சட்டத்தரணியான தொடரச் செய்ய முடியும். அல்லது புதிதாக மூத்த சட்டத்தரணி யாரையாவது கூட நியமிக்க முடியும். கர்நாடக அரசின் முடிவிலேயே அடுத்தகட்ட நடவடிக்கைகள் தொடரும். இதில் வினோதம் என்னவென்றால், வழக்கில் ஆஜராக சென்ற பவானி சிங்கும் தனது பதவிக்காலம் முடிந்துவிட்டதால், இனிமேல் இதில் ஆஜராக கூடாது என்ற கோணத்தில் யோசிக்கவில்லை. கர்நாடக அரசு தரப்பிலும் ஜெயலலிதா தரப்பிலும் கூட இதுகுறித்த முன்யோசனை இல்லை என்று கூறப்படுகிறது.

ஆனால், நீதிபதி இந்த விடயத்தை சரியாகக் கேட்டு, நீதிமன்றத்தை ஒரு நிமிடம் திக்குமுக்காட செய்துவிட்டார். இப்போதுதான் இரு தரப்புமே அரச தரப்பு சட்டத்தரணி குறித்த யோசனையை தொடங்கியுள்ளது. இந்த குழப்பத்தால், ஜெயலலிதா சிறையில் இருப்பது சரியில்லை. எனவே, அவருக்கு பிணை வேண்டும் என்று ஜெத்மலானி வாதிட்டார். ஆனால் நீதிபதி ரத்தின கலாவோ, அப்படி அவசரமாக பிணை வேண்டும் என்றால், உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியிடம் மனு தாக்கல் செய்யுங்கள் என்று கூறிவிட்டார். (தட்ஸ்தமிழ்)