ஜெயலலிதா, சசிகலா 9ம் திகதி நீதிமன்றில் ஆஜராக வேண்டும்!

முதல்–அமைச்சர் ஜெயலலிதா, சசிகலா ஆகியோர் 1991-ம் ஆண்டு முதல் 1993-ம் ஆண்டு வரை வருமான கணக்கை தாக்கல் செய்யவில்லை என்று கூறி அவர்கள் மீது எழும்பூரில் உள்ள 2-வது பொருளாதார குற்றவியல் கோர்ட்டில் வருமான வரித்துறை உதவி கமிஷனர் வழக்கு தாக்கல் செய்தார். 

இந்த வழக்கை விரைவாக விசாரித்து முடிக்கும்படி, சுப்ரீம் கோர்ட்டும் உத்தரவிட்டு இருந்தது. இந்த வழக்கு கடந்த முறை விசாரணைக்கு வந்தபோது, ஜெயலலிதா தரப்பில் ஆஜராகும் மூத்த வக்கீல் பி.குமாரின் தாயார் இறந்து விட்டார் என்றும் வழக்கு விசாரணையை தள்ளிவைக்க வேண்டும் என்றும் கோரிக்கை வைக்கப்பட்டது. இதையடுத்து, இந்த வழக்கு ஜூன் 3-ந் திகதிக்கு (இன்று) தள்ளிவைக்கப்பட்டது. 

இந்த நிலையில், இந்த வழக்கு நீதிபதி ஆர்.தட்சணா மூர்த்தி முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, ஜெயலலிதா, சசிகலா சார்பில் வக்கீல் செந்தில் ஆஜராகி, ‘இந்த வழக்கு விசாரணையை ஜூலை மாதத்துக்கு தள்ளி வைக்க வேண்டும்’ என்று வாதம் செய்தார். 

இதற்கு வருமான வரித்துறை சார்பில் ஆஜரான வக்கீல் ராமசாமி கடும் எதிர்ப்பு தெரிவித்தார். இந்த வழக்கை விரைவாக விசாரித்து பைசல் செய்ய வேண்டும் என்று சுப்ரீம் கோர்ட்டு ஏற்கனவே உத்தரவிட்டுள்ளது. எனவே குற்றம் சுமத்தப்பட்ட ஜெயலலிதா, சசிகலா ஆகியோரை நேரில் ஆஜராக உத்தரவிட வேண்டும். விசாரணையை அடுத்த வாரத்துக்கு தள்ளி வைக்கவேண்டும்’ என்று வாதிட்டார். 

இதை ஏற்றுக் கொண்ட நீதிபதி தட்சணாமூர்த்தி, இந்த வழக்கை வருகிற 9–ந் திகதிக்கு தள்ளிவைக்கிறேன். அன்று ஜெயலலிதா, சசிகலா ஆகியோர் நேரில் ஆஜராக வேண்டும் என்று உத்தரவிட்டார்.