சொத்துக் குவிப்பு வழக்கின் தீர்ப்பு நாளை; ஜெயாவை நேரில் ஆஜராகுமாறு உத்தரவு

சொத்துக் குவிப்பு வழக்கின் தீர்ப்பு நாளை; ஜெயாவை நேரில் ஆஜராகுமாறு உத்தரவு

தமிழக முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு எதிரான சொத்துக்குவிப்பு வழக்கின் தீர்ப்பு நாளை சனிக்கிழமை வழங்கப்படவுள்ளது. இந்நிலையில், இவ்வழக்கின் சந்தேகநபர்களான ஜெயலலிதா, அவரது நண்பி சசிகலா மற்றும் சுதாகரன் ஆகியோரை நாளை நீதிமன்றில் ஆஜராகுமாறு பெங்களூர் சிறப்பு நீதிமன்றம் இன்று உத்தரவிட்டது. 

ஜெயலலிதா மீதான சொத்துக்குவிப்பு வழக்கில் நாளை சனிக்கிழமை காலை 11 மணிக்கு தீர்ப்பு வழங்கப்படவுள்ளது. இந்நிலையில், இந்த தீர்ப்பை வேறு மாநிலத்தில் வைத்து வழங்கவோ அல்லது தீர்ப்பின்போது ஜெயலலிதா, நீதிமன்றத்தில் ஆஜராவதில் இருந்து விலக்கு அளிக்கவோ உத்தரவிடுமாறு உச்ச நீதிமன்றத்தில் மனுவொன்று தாக்கல் செய்யப்பட்டது. 

அந்த மனுவில், 'இந்த வழக்கில் ஜெயலலிதா முதல் குற்றவாளியாக சேர்க்கப்பட்டிருந்தாலும் அவர் அரசியல் சட்டத்தின் கீழ் வரும் முதலமைச்சர் பதவியை வகிப்பவர். அ.தி.மு.க. என்னும் மாபெரும் அரசியல் இயக்கத்தின் தலைவி.

தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பு உள்ளிட்ட சில தடை செய்யப்பட்ட இயக்கங்களால் ஏற்கெனவே ஜெயலலிதாவின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் இருக்கிறது. மேலும் தமிழகத்துக்கும், கர்நாடகத்துக்கும் இடையே பல ஆண்டு காலமாக இருந்து வந்த காவிரி பிரச்சினை தொடர்பாக உச்ச நீதிமன்றத்திலும் காவிரி தீர்ப்பாயத்திலும் பல மனுக்கள் தாக்கல் செய்து, தமிழகத்துக்கு ஆதரவாக பல தீர்ப்புக்களை பெற்றிருக்கிறார்.

இதனால், கர்நாடக மாநிலத்தில் உள்ள சில கன்னட அமைப்புக்களும், விவசாய அமைப்புக்களும் ஏற்கெனவே தமிழக முதலமைச்சரை எதிர்த்து பல போராட்டங்களையும், மறியல்களையும், பேரணிகளையும் நடத்தியுள்ளனர். எனவே, கர்நாடக மாநிலத்தில் அவருடைய பாதுகாப்புக்கு உத்தரவாதம் இல்லை.

கர்நாடகத்தில் 25ஆம் திகதி தொடங்கிய தசரா திருவிழாவுக்காக இலட்சக்கணக்கான சுற்றுலா பயணிகள் குவிந்துள்ளனர். அத்துடன், ஐ.பி.எல் கிரிக்கெட் போட்டியும் நடப்பதால் தீர்ப்புக்காக பெங்களூர் வரப்போகும் ஜெயலலிதாவுக்கு போதிய பாதுகாப்பு வழங்க முடியாது என்று பெங்களூர் மாநகர பொலிஸ் ஆணையாளர், உயர்நீதிமன்ற பதிவாளருக்கு தெரிவித்து இருக்கிறார். ஆனால் இவற்றை கருத்தில் கொள்ளாமல் அவரது மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

பெங்களூர் நகர காவல் ஆணையாளரே, ஜெயலலிதாவுக்கு பாதுகாப்பு அளிக்க முடியாது என்று தெரிவித்தபோதும் கூட, குறித்த திகதியில் தீர்ப்பு வழங்கப்படும் என்று சிறப்பு நீதிமன்றம் அறிவித்துள்ளது.

எனவே, ஜெயலலிதாவின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு, இந்த வழக்கின் தீர்ப்பை பெங்களூரில் இல்லாமல் வேறு ஏதாவது மாநிலத்தில் வைத்து வழங்க உத்தரவிட வேண்டும். அல்லது தீர்ப்பு வழங்கப்படும் நாளில் நீதிமன்றத்தில் ஆஜராவதில் இருந்து ஜெயலலிதாவுக்கு விலக்கு அளிக்க உத்தரவு பிறப்பிக்க வேண்டும்' என்று அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.

இந்த மனு மீது இன்று விசாரணை நடத்திய உச்ச நீதிமன்றம், இது தொடர்பாக கர்நாடக சிறப்பு நீதிமன்றத்துக்கு எந்தவொரு உத்தரவையும் பிறப்பிக்க முடியாது என்று கூறி ஜெயலலிதாவின் கோரிக்கையை ஏற்க மறுத்து விட்டது.