சேது சமுத்திர திட்ட வழக்கு; மத்திய அரசுக்கு மேலும் 6 வாரம் அவகாசம்

சேது சமுத்திர திட்டத்தை மாற்றுப்பாதையில் நிறைவேற்றுவது பற்றிய விஷயத்தில் மத்திய அரசின் நிலைப்பாடு என்ன என்று தெரிவிக்க மத்திய அரசுக்கு மேலும் 6 வார கால அவகாசம் அளித்து உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இந்தியா-இலங்கை இடையிலான கடல் பகுதியில் சேது சமுத்திர திட்டம் செயல்படுத்த திட்டமிடப்பட்டது. அப்பகுதியில் `ராமர் பாலம்´ என்று அழைக்கப்படும் ஆதாம் பாலத்தை இடித்து இத்திட்டத்தை நிறைவேற்ற திட்டமிடப்பட்டது.

ராமர் பாலத்தை இடிப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து உயர் நீதிமன்றத்தில் பல்வேறு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.

அவற்றை விசாரித்த உயர் நீதிமன்றம், ராமர் பாலத்தை இடிக்காமல், மாற்றுப்பாதையில் திட்டத்தை செயல் படுத்துவது குறித்து பரிசீலிக்குமாறு மத்திய அரசை கேட்டுக்கொண்டது.

இதையடுத்து, மாற்றுப்பாதையில் சேது சமுத்திர திட்டத்தை செயல்படுத்துவது குறித்து ஆய்வு செய்ய பிரபல சுற்றுச்சூழல் நிபுணர் ஆர்.கே.பச்சோரி தலைமையிலான உயர்மட்ட குழுவை பிரதமர் மன்மோகன் சிங் நியமித்தார்.

அந்த குழு தனது அறிக்கையில், மாற்றுப்பாதையில் திட்டத்தை நிறைவேற்றுவது பொருளாதார ரீதியாக சாத்தியம் அல்ல என்றும், கடல்வாழ் உயிரினங்களுக்கும், பொது நலனுக்கும் ஏற்றதல்ல என்றும் கூறி இருந்தது.

அந்த அறிக்கை, உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. அந்த அறிக்கை பற்றி தனது நிலைப்பாட்டை தெரிவிக்க மத்திய அரசுக்கு உயர் நீதிமன்றம் ஏற்கனவே கால அவகாசம் அளித்திருந்தது.

இந்நிலையில், உயர் நீதிமன்ற நீதிபதிகள் எச்.எல்.தத்து, சி.கே.பிரசாத் ஆகியோர் அடங்கிய பெஞ்ச் முன்பு நேற்று இம்மனு விசாரணைக்கு வந்தது. அப்போது, மத்திய அரசு சார்பில் ஆஜரான வக்கீல், மத்திய அரசு தனது நிலைப்பாட்டை தீர்மானிக்க கூடுதல் கால அவகாசம் அளிக்குமாறு கேட்டுக்கொண்டார்.

அதை ஏற்று, மத்திய அரசுக்கு மேலும் 6 வார கால அவகாசம் அளித்து நீதிபதிகள் உத்தரவிட்டனர். அடுத்தகட்ட விசாரணையை டிசம்பர் 3-ந் திகதிக்கு ஒத்திவைத்தனர்.