சென்னை அகதி முகாமில் இலங்கை பெண் தீயில் கருகி பலி

சென்னை புழல் காவாங்கரை பகுதியில் உள்ள இலங்கை அகதிகள் முகாமில் வசித்து வருபவர் கஜேந்திரன். இவரது மனைவி ரம்யா (வயது 21). இவர்களுக்கு திருமணமாகி 2 ஆண்டுகள் ஆகிறது. குழந்தைகள் இல்லை.

சம்பவத்தன்று ரம்யா சமையல் செய்வதற்காக மண்எண்ணெய் அடுப்பை பற்றவைத்தார். அப்போது, எதிர்பாராதவிதமாக ரம்யா மீது தீ பரவியது. தீயில் கருகிய அவரை மீட்டு, மாதவரம் அருகே உள்ள ரெட்டேரியில் ஒரு தனியார் வைத்தியசாலையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டும் பலனின்றி நேற்று பரிதாபமாக உயிரிழந்தார்.

இதற்கிடையே இறந்த ரம்யாவின் உறவினர்கள், வைத்தியசாலையில் சரியாக சிகிச்சை அளிக்காததால் அவர் இறந்துவிட்டதாக கூறி, உடலை வாங்க மறுத்து முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதுகுறித்து தகவல் அறிந்ததும், சம்பவ இடத்திற்கு புழல் பொலிஸார் விரைந்து சென்று அவர்களை சமாதானம் செய்தனர். இதனால் அங்கு சிறிதுநேரம் பரபரப்பு ஏற்பட்டது.

பின்னர், பிணத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக சென்னை ஸ்டான்லி வைத்தியசாலைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து புழல் பொலிஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.