சூதாட்ட தரகர்களுடன் எனக்கு தொடர்பு இல்லை

ஐ.பி.எல். கிரிக்கெட் சூதாட்ட வழக்கு, கடந்த ஆண்டு பெரும் புயலை கிளப்பியது. மும்பை, டெல்லி, சென்னை நகரங்களில் இது தொடர்பாக பொலிஸ் விசாரணை நடத்தப்பட்டது. கிரிக்கெட் வீரர் ஸ்ரீசாந்த் உள்பட 3 வீரர்கள் கைது செய்யப்பட்டனர். இந்தி நடிகர் விண்டூதாராசிங்கும் கைது செய்யப்பட்டார். 

சென்னையில் நடந்த கிரிக்கெட் சூதாட்டம் குறித்து, சி.பி.சி.ஐ.டி. பொலிசார் விசாரணை நடத்தினார்கள். சி.பி.சி.ஐ.டி. பொலிசார் எடுத்த நடவடிக்கையில் பிரபல ஓட்டல் அதிபர் விக்ரம்அகர்வால் மற்றும் கிரிக்கெட் தரகர்கள் ஹரீஸ், கிட்டி உள்பட 21 பேர் கைது செய்யப்பட்டனர். 

சென்னை தொழில் அதிபரும், இந்திய கிரிக்கெட் வாரிய தலைவர் சீனிவாசனின் உறவினருமான குருநாத்மெய்யப்பன் மீதும் மும்பை பொலிசார் வழக்கு போட்டுள்ளனர். 

இந்த நிலையில் தமிழக சி.பி.சி.ஐ.டி. பொலிசார் குருநாத் மெய்யப்பனிடம் விசாரணை நடத்த திட்டமிட்டுள்ளதாகவும், இதற்காக ஆஜராகுமாறு குருநாத்மெய்யப்பனுக்கு சி.பி.சி.ஐ.டி. பொலிசார் சம்மன் அனுப்பி உள்ளதாகவும், நேற்று அவர் சி.பி.சி.ஐ.டி. பொலிஸில் ஆஜராக போவதாகவும் தகவல் வெளியானது. 

ஆனால் நேற்று அவர் சி.பி. சி.ஐ.டி. பொலிஸில் ஆஜராகவில்லை. இதற்கிடையில், கடந்த ஆண்டு ஜூலை மாதம், குருநாத்மெய்யப்பனுக்கு, கிரிக்கெட் சூதாட்டம் தொடர்பாக 40 கேள்விகளை, சி.பி.சி.ஐ.டி. பொலிஸார் அனுப்பியதாகவும், அதற்கு குருநாத் மெய்யப்பன் அளித்த பதில்களை, சி.பி.சி.ஐ.டி. பொலிஸார் அவரது வாக்குமூலமாக பதிவு செய்துள்ளதாகவும், நேற்று பரபரப்பு தகவல்கள் வெளியானது. 

குருநாத் மெய்யப்பன் அந்த வாக்குமூலத்தில், தமிழக கிரிக்கெட் சூதாட்ட தரகர்கள் யாருடனும் தனக்கு தொடர்பு இல்லை என்றும், ஓட்டல் அதிபர் விக்ரம் அகர்வால் தனக்கு தெரிந்த நண்பர் என்றும், ஆனால் அவர் கிரிக்கெட் சூதாட்டத்தில் ஈடுபட்டது தனக்கு தெரியாது என்றும், தெரிவித்துள்ளதாக தகவல் கூறப்படுகிறது. 

மேலும் நடிகர் விண்டூதாராசிங் தனக்கு தெரிந்த நண்பர் என்றும், அவரோடு நட்புரீதியாக, கிரிக்கெட் சூதாட்டத்தில் (பெட்டிங்) ஈடுபட்டதாகவும், அவர் தனது வாக்குமூலத்தில் மேலும் கூறி இருப்பதாகவும், நேற்று தகவல்கள் வெளியானது. ஆனால் சி.பி.சி.ஐ.டி. பொலிஸார் இதுபற்றிய தகவல்கள் எதையும் அதிகாரப்பூர்வமாக வெளியிடவில்லை.