சுவிஸ் எச்.எஸ்.பி.சி. வங்கியில் இந்தியர்களின் கறுப்பு பணம்

சுவிட்சர்லாந்தின், எச்.எஸ்.பி.சி., வங்கியில் கறுப்பு பணத்தை பதுக்கி வைத்துள்ள, இந்தியர்களின் விவரங்களை தெரிந்து கொள்வதற்காக, வருமான வரித் துறை அதிகாரிகள், சுவிஸ் வருவாய் துறை அதிகாரிகளை அணுகியுள்ளனர். கறுப்பு பணத்தை பதுக்கி வைத்துள்ளவர்களில் பலர், போலியான பெயர்களில், வங்கியில் கணக்கு வைத்திருப்பது, முதல் கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

வரி செலுத்துவதை தவிர்ப்பதற்காகவும், தங்களின் வருமானம் பற்றிய விவரங்கள், வெளியில் தெரியாமல் மறைப்பதற்காகவும், இந்தியாவைச் சேர்ந்த, பல வி.ஐ.பி.,க்கள், பெருமளவு கறுப்பு பணத்தை, சுவிட்சர்லாந்தில் உள்ள, வங்கிகளில் பதுக்கி வைக்கின்றனர். இந்த வங்கிகள், தங்களின் வாடிக்கையாளர் பற்றிய விவரங்களையும், அவர்களின் கணக்குகளில் உள்ள தொகைகளையும், ரகசியமாக வைத்திருக்கின்றன.

இதனால், கறுப்பு பணத்தை பதுக்கி வைப்போரின் சொர்க்கமாக, சுவிட்சர்லாந்து வங்கிகள் விளங்குகின்றன.சுவிட்சர்லாந்தின், எச்.எஸ்.பி.சி., வங்கியில், கறுப்பு பணத்தை பதுக்கி வைத்துள்ள, 700 இந்தியர்களை பற்றிய பட்டியலை, பிரான்சு அரசு, மத்திய அரசிடம் ஒப்படைத்தது. சமூக ஆர்வலரான, அரவிந்த் கெஜ்ரிவாலும், கறுப்பு பணத்தை பதுக்கி வைத்துள்ளவர்களின் பட்டியலை, சமீபத்தில் வெளியிட்டு, பரபரப்பை ஏற்படுத்தினார்.இதையடுத்து, வருமான வரித் துறை அதிகாரிகள், இது தொடர்பான விசாரணையை தீவிரப் படுத்தியுள்ளனர்.

இதுகுறித்து, வருமான வரித் துறை வட்டாரங்கள் கூறியதாவது: எச்.எஸ்.பி.சி., வங்கியில் கணக்கு வைத்திருக்கும் இந்தியர்களை பற்றிய விவரங்களை தெரிந்து கொள்வதற்காக, மத்திய நேரடி வரி வாரியத்தின் அதிகாரிகள், சுவிட்சர்லாந்து நாட்டின், வருவாய் துறை அதிகாரிகளை அணுகியுள்ளனர்.

இந்தியா - சுவிட்சர்லாந்து நாடுகளுக்கு இடையேயான, இரட்டை வரி விதிப்பு தவிர்ப்பு ஒப்பந்தம், சமீபத்தில் மாற்றி அமைக்கப்பட்டது. இதையடுத்து, எச்.எஸ்.பி.சி., வங்கியில், கணக்கு வைத்திருக்கும் இந்தியர்களை பற்றிய விவரங்களை, சுவிட்சர்லாந்து அரசு, இந்தியாவிடம் தெரிவிக்கும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.முதல் கட்ட விசாரணையின் அடிப்படையில், எச்.எஸ்.பி.சி., வங்கியில் கணக்கு வைத்திருக்கும் இந்தியர்களில் பலர், போலியான பெயர்களில், கணக்கு வைத்திருப்பதாக தெரியவந்துள்ளது. அடுத்த சில வாரங்களில், இதுகுறித்த விசாரணை, மேலும் தீவிரமடையும் என, எதிர்பார்க்கப்படுகிறது.இவ்வாறு, வருமான வரித் துறை வட்டாரங்கள் தெரிவித்தன.