சவுதியில் 2ம் திருமணம் செய்த கணவனை சுட்டுக் கொன்ற மனைவி

மத்திய கிழக்கு நாடுகளில் ஒன்றான சவுதி அரேபியாவில் ஆண்கள் பலதார திருமணங்களை செய்து கொள்ள அந்நாட்டின் சட்டதிட்டங்கள் அனுமதியளித்துள்ளது. 

இந்நிலையில், தனது எதிர்ப்பையும் மீறி வேறொரு பெண்ணை திருமணம் செய்து கொண்ட கணவனை முதல் மனைவி துப்பாக்கியால் சுட்டுக் கொன்ற சம்பவம், இரண்டாவது திருமணம் செய்து கொள்ள நினைக்கும் அந்நாட்டின் ஆண்வர்க்கத்தை ஒன்றுக்கு இருமுறை சிந்திக்க வைத்துள்ளது. 

சவுதியின் வடக்கு எல்லைப் பிரதேசமான அல்-ஜவுஃப் பகுதியை சேர்ந்த ஒருவர், தனது முதல் மனைவியின் விருப்பத்துக்கு மாறாக சில தினங்களுக்கு முன்னர் இன்னொரு பெண்ணை திருமணம் செய்து கொண்டார். 

இது தெரிய வந்ததும் ஆவேசமடைந்த முதல் மனைவி, உல்லாச வாழ்க்கைக்கு திட்டமிட்டிருந்த கணவனையும், அவரது புது மனைவியையும் கண்மூடித்தனமாக துப்பாக்கியால் சுட்டார். இதில் உடலின் பல பகுதிகளில் குண்டு பாய்ந்த கணவன், சம்பவ இடத்திலேயே இரத்த வெள்ளத்தில் துடிதுடித்து பலியாகினார். 

அவரது இரண்டாவது மனைவி குண்டு காயங்களுடன் உயிருக்கு ஆபத்தான நிலையில் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகிறார்.